51 நாட்களுக்குப் பின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்…

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  இதனிடையே, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த மே 7-ம் தேதி இதுகுறித்து விசாரணை நடைபெற்றது.

அப்போது,  இடைக்கால ஜாமின் வழங்கினால் அரசு தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட முடியாது என உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் தெரிவித்தது. அதற்கு அவர்களும் கையெழுத்திட மாட்டார் என உறுதியளித்தனர். கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை 44 பக்க பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றம் நேற்று தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்குவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணையை ஒத்திவைத்தது.

https://twitter.com/news7tamil/status/1788854485575471254

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (மே 10) நடைபெறும் எனவும், இடைக்கால ஜாமீன் குறித்து உத்தரவும் பிறப்பிக்கப்படலாம் எனவும் உச்சநீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்தவகையில், இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ஜூன் 1-ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. 

மேலும் ஜூன் 2-ம் தேதி ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும்,  முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிபதிகள் விதித்த நிபந்தனைகள் வருமாறு:

  • ரூ.50,000 பிணைத்தொகை கட்ட வேண்டும்
  • முதலமைச்சர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது
  • தன்னிச்சையாக எந்த அரசு கோப்புகளிலும் கையெழுத்து போடக்கூடாது
  • வழக்கு தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கவோ,  வழக்கு விவரம் தொடர்பாகவோ பேச கூடாது
  • வழக்கின் சாட்சிகளிடம் பேசவோ,  சந்திக்க முற்படவோ கூடாது,
  • வழக்கு தொடர்பான ஆவண கோப்புகளை ஆய்வு செய்யவோ,  பார்க்கவோ முற்படக் கூடாது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.