தமிழ்நாட்டை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் குறித்து அரியானாவில் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை நகர பகுதியில் உள்ள இரண்டு ஏ.டி.எம் மையம், கலசப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம் மையம் மற்றும் போளூர் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம் மையம் ஆகிய பகுதிகளில் வெல்டிங் மிஷின் மூலம் துண்டித்து 82 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் வடமாநில “மேவாட்” கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கொள்ளை சம்பவத்தை அடுத்து அனைத்து வங்கி ஏடிஎம் மையங்களிலும் முகம் தெரியும் படியான சிசிடிவி கேமராக்களை பொருத்தவேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கொள்ளையர்களை பிடிக்க திருவண்ணாமலை, வேலூர் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அடுத்தடுத்த இடங்களில் நள்ளிரவில் நடந்த இந்த கொள்ளை சம்பவங்களில் காவல்துறையினர் இரவு ரோந்து பணியை சரிவர செய்யாததுதான் காரணம் என உயர் அதிகாரிகளின் துறை ரீதியிலான விசாரணையில் தெரியவந்தது.
இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடாத திருவண்ணாமலை நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன், தலைமை காவலர் வரதராஜன், போளூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, காவல் உதவி ஆய்வாளர் அருள், கலசப்பாக்கம் காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பலராமன், தலைமை காவலர் சுதாகர் ஆகியோரை திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க வெளி மாநிலங்களுக்கு சென்ற தனிப்படை போலீசார் பெங்களூர், அரியானா, ஆந்திர மாநிலம் விஜயவாடா ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கொள்ளையர்கள் தேனி மலையில் தாங்கள் வந்த வாகனத்தை நிறுத்திவிட்டு நோட்டமிடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஏடிஎம் கொள்ளைக்கு பயன்படுத்திய டாடா சுமோ கோல்டு கார் திருப்பதியில் திருடப்பட்டது என காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. காரின் உரிமையாளர் தனது கார் திருடப்பட்டதாக திருப்பதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொள்ளையர்கள் குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதுகுறித்து ஹரியானாவில் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- பி. ஜேம்ஸ் லிசா