அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய கூட்டத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டார். காமெனியின் உயிரிழப்பிற்கு பழிவாங்கப்படும் என்று அறிவித்துள்ள ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதற்கு பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. காமேனி கொல்லப்பட்டதை கண்டித்து பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
மேலும் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. தொடர்ந்து போராட்டகாரர்கள் தூதரகத்தின் உள்ளே நுழைய முற்பட்டனர். இதனால அவர்களை காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கலைத்தனர். பாகிஸ்தானும் ஈராக்கும், ஈரானையடுத்து அதிகமான ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் உள்ள நாடு ஆகும்.
இந்தியாவிலும் காஷ்மீர், ஐதாரபாத், பெங்களூர், சென்னை, லக்னோ ஆகிய இடங்களில் காமேனி இறப்பிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.







