பூரணச்சந்திரன் மரணம் ; திமுகவின் நியாயமற்ற தன்மையால் நடந்தது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு……!

திமுக அரசாங்கத்தின் நியாயமற்ற தன்மையால் தான் பூரண சந்திரனின் மரணம் நடந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை மண்டேலா நகர் சந்திப்பு அருகே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக  பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக  தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாக தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது :

அன்னை மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் என் வணக்கஙகள். இது பாண்டிய நாடு வீரம் விளைகின்ற பூமி. இந்த மகத்தான பூமியிலிருந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ,மாவீரன் அழகுமுத்துக்கோன் ,வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், இம்மானுவேல் சேகரன் , ஆகியோரின் பங்களிப்பை நான் உளமாற நினைவு கூறுகிறேன்.

இங்கே வருவதற்கு முன்பு நான் திருப்பரங்குன்றம் சென்றிருந்தேன். முதல் படை வீட்டிற்கு சொந்தக்காரர் முருகனை தரிசனம் செய்தது தெய்வீகமான அனுபவமாக இருந்தது.

நான் தமிழ்நாடு மற்றும் ஒட்டுமொத்த தேசத்தின் நல்வாழ்விற்காக  இறைவனிடம் பிரார்த்தித்தேன். அதே நேரத்தில் என் இதயம் கனத்தது. பூரண சந்திரன் என்ற இளம் பக்தன் உயிர்த்தியாகம் செய்தார் என்பதை நான் நினைத்து பார்த்தேன். இன்று நான் அவருடைய மனைவி திருமதி இந்துமதி பூரண சந்திரனையும் அவர்களுடைய இரண்டு சின்ன சிறு குழந்தைகளையும் சந்தித்து வந்தேன். அவர்களுடைய தீவிரமான துக்கத்தை உணர என்னால் உணர முடிந்தது. என்னுடைய ஆழமான இரங்கலை நான் அவர்களிடம் தெரிவித்து விட்டு வந்தேன்.

பூரண சந்திரன் அவர்களின் அமைதி அடைய நான் என் உருக்கமான பிரார்த்தனைகளை எம்பிரான் முருகனின் திருவடியில் அர்ப்பணம் செய்கின்றேன். ஆனால் ஒரு விஷயம் திமுக அரசாங்கத்தின் நியாயமற்ற தன்மையால் இது நடந்திருக்கிறது என்பது வலியை ஏற்படுத்திகின்றது. திமுக என்ன வேண்டுமானால் செய்து போகட்டும். ஆனால் இறுதியில் வாய்மையே வெல்லும் என் அப்பன் முருகனின் பக்தர்கள் வெல்வார்கள்.

தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி உறுதி செய்யும். ஜெயலலிதா ஆட்சியில் மக்கள் பாதுகாப்பாக இருந்ததை நினைவுகூர்கிறார்கள். நமக்கு நல்ல அரசியலமைப்பை தந்தவர்கள் நம் முன்னோடிகள். அரசமைப்பை பாதுகாப்பதே நமது முதன்மையான கடமை.

அரசியலில் நேர்மை என்று வரும்போது ஒட்டுமொத்த நாட்டுக்கும் எடுத்துக்காட்டாக இருந்தார் காமராஜர். திமுக இதற்கு நேர்மாறானது. அரசுப் பணி, ஒப்பந்தங்கள் பெறுவது, மணல் திருட்டு, டாஸ்மாக் மோசடி என பல்வேறு மோசடிகளில் திமுக ஈடுபட்டு வருகிறது.

நல்ல திட்டங்களைக் கொண்டுவருவதில் அமைச்சர்களிடையே போட்டி இருக்கும். ஆனால், திமுகவில் மோசடி செய்வதில் அமைச்சர்களுக்கு இடையே போட்டி. மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக ஆட்சி.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கு நிரந்தர இடம் அளித்து தமிழ் கலாசாரத்திற்கு மரியாதை அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.