ஈரானின் இடைக்கால உச்ச தலைவர் நியமனம் : யார் இந்த அலிரேசா அராஃபி….?

ஈரானின் இடைக்கால உச்ச தலைவராக அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையில் காமெனி கொல்லப்பட்டதையடுத்து ஈரான் அதன் அரசியலமைப்பின் 111வது பிரிவை செயல்படுத்தியுள்ளது. இதன் படி ஈரானிய அரசியலமைப்பின் கீழ், உச்சத் தலைவர், மத அறிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பான நிபுணர்கள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மூத்த ஷியா மதகுருவாக இருக்க வேண்டும்

இதனால் ஒரு நிரந்தர உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை உச்ச தலைவரின் பணிகளை செயல்படுத்த மூன்று உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கவுன்சிலில் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கோலம்-ஹொசைன் மொஹ்செனி-எஜேய் மற்றும் மதகுரு அலிரேசா அராஃபி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் ஈரானின் இடைக்கால உச்ச தலைவராக அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த அலிரேசா அராஃபி

1959 ஆம் ஆண்டு யாஸ்த் மாகாணத்தின் மெய்போட்டில் ஒரு மதகுரு குடும்பத்தில் பிறந்தவர் அலிரேசா அராஃபி. ஈரானின் கோமில் நகரத்தில் முக்கிய மத அறிஞர்களிடம் பயின்றார்.

மறைந்த உச்ச தலைவர் காமெனி, அராஃபியை பல முக்கிய பதவிகளுக்கு நியமித்தார். ஈரான் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மதகுருமார்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஒரு முக்கிய நிறுவனமான அல்-முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்திற்கும் அராஃபி தலைமை தாங்கினார். மேலும் 2019 ஆம் ஆண்டில் சட்டம் மற்றும் வேட்பாளர்களை ஆராயும் அரசியலமைப்பு அமைப்பான சக்திவாய்ந்த கார்டியன் கவுன்சிலுக்கு நியமிக்கப்பட்டார்.

67 வயதான ஆயத்துல்லா அராஃபி ஒரு அனுபவமிக்க மதகுரு மற்றும் கமேனியின் நெருங்கிய கூட்டாளி ஆவார். அராஃபி தற்போது உச்சத் தலைவரை நியமிக்கும் நிபுணர்கள் சபையின் துணைத் தலைவராக பணியாற்றுகிறார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.