தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திய NET தேர்வு தொடர்பாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, ஆங்கிலம், வணிகவியல், சமூகவியல் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “மோடி ஜி, உங்கள் தேர்வு முகமை இப்போது என்ன செய்துள்ளது என்று பாருங்கள்!. கடந்த ஜூன் 22 முதல் 30 வரை நடத்தப்பட்ட UGC-NET தேர்வுகளில் தவறான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டதாகவும், பழைய கேள்விகள் மீண்டும் கேட்கப்பட்டதாகவும் கூறி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுக் கணக்கில் படித்து, கட்டணம் செலுத்தி, தூரப் பயணம் மேற்கொண்டு தேர்வு எழுதிய மாணவர்கள், தேசிய தேர்வுகள் முகமை செய்த பிழையால் மீண்டும் செப்டம்பரில் தேர்வு எழுதத் தள்ளப்பட்டுள்ளனர் என ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார்.
கோட்டா, டேராடூன், பிரயாக்ராஜ் என நான் செல்லும் இடங்களில் எல்லாம் இதையேதான் கூறுகிறேன். இது இனி கல்வி முறை அல்ல; மாணவர்களின் பணம், காலம், மன ஆரோக்கியம் மற்றும் நம்பிக்கையைப் பிழிந்தெடுக்கும் ஒரு சுரண்டல் இயந்திரம்” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே கசிந்தனவா என்ற கேள்விகளுக்கு தேசிய தேர்வுகள் முகமை இன்னும் சரியான பதிலளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தர்மேந்திர பிரதானின் ராஜினாமா என்பது முதல் படிதான்
NTA-வின் உயர் அதிகாரிகளும் இந்த அலட்சியத்திற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
செப்டம்பரில் மீண்டும் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்குத் தான் துணையாக இருப்பேன் எனக் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, ஒரு தேர்வைக்கூடச் சரியாக நடத்த முடியாத இந்த அமைப்பிற்குப் பிரதமர் மோடி பதிலளிக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் உறுதியளித்துள்ளார்.




