பாகிஸ்தானில் ஆசிய சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டி: இந்திய அணி மாபெரும் வெற்றி

பாகிஸ்தானில் ஆசிய அளவிலான சக்கர நாற்காலி 20-20 கிரிக்கெட் போட்டியில், இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணி பங்குகொண்டு மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் , கராச்சியில் ஆசிய அளவிலான சக்கர நாற்காலி…

பாகிஸ்தானில் ஆசிய அளவிலான சக்கர நாற்காலி 20-20 கிரிக்கெட் போட்டியில், இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணி பங்குகொண்டு மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் , கராச்சியில் ஆசிய அளவிலான சக்கர நாற்காலி 20-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அணிகள் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற போட்டியில் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 17 பேர் கொண்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்குபெற்றனர். இதில் இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதி, கீழச்செல்வனூர் கிராமத்தை சேர்ந்த வினோத் பாபு என்பவர் நியமனம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து விநோத் பாபு ஏழ்மை காரணமாக தனது மருத்துவ படிப்பை பாதியிலேயே கைவிட்டவர். அதனால் பாகிஸ்தானில் தனது தலைமையில் நடைபெற உள்ள போட்டியில் சென்று கலந்துகொள்ள தமிழக அரசிடமும், தனியார் தொண்டு நிறுவனங்களிடமும் நிதிஉதவி கேட்டிருந்தார். அவர்கள் அளித்த உதவியின் அடிப்படையில் பாகிஸ்தான் சென்று சக்கர நாற்காலி 20-20 கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டார்.

விநோத் பாபு தலைமையில் கராச்சியில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி மாபெரும் வெற்றியை பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு நன்றி:

கோப்பையை கைப்பற்றிய மகிழ்ச்சியில், அதற்கு நன்றி தெரிவிக்க வினோத் பாபு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். அப்போது அப்பகுதியில் கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் வினோத் பாவுக்கு தங்களது வரவேற்பையும், பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

அப்போது பேசிய அவர் தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆகியோர் எனது குடும்பத்தின் நிலையைகருத்தில் கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும், சலுகைகள் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் இப்போட்டியில் விளையாடி வெற்றி பெறுவதற்கும், நிதி உதவி வழங்குவதற்கும் உதவி செய்த நியூஸ் செவன் தமிழ் தொலைக்காட்சிக்கு நன்றியும் பாராட்டையும் கண்ணீர் மல்க தெரிவித்துக் கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.