அண்ணாமலை பல்கலை கழகம் ; பேராசிரியர்கள், ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்…………!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் கூட்டமைப்பினர் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள், கூட்டமைப்பின் சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று முதல் கால வரையற்ற போராட்டத்தை அறிவித்தனர்.

அதன்படி ஓய்வு பெற்ற ஆசிரியர் ஊழியர்களுக்கு 15 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள மாத ஓய்வூதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். ஆசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத ஏழாவது ஊதியக்குழு நிலுவை தொகை வழங்கிட வேண்டும் எனவும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் என்.எம்.ஆர். தொகுப்பூதியர் மற்றும் தின கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை துவக்கி உள்ளனர்.

கல்லூரி நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக பேராசிரியர்கள் ஊழியர்கள் ஓய்வூதியர்களின் வேண்டுகோளை ஏற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தொடர் உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர்.

பேராசிரியர்கள்,ஊழியர்கள் ஆகியோர் போராட்டத்தை துவங்கிய நிலையில் மாணவர்களின் கல்வி பயில்வது கேள்விக்குறி ஏற்படும் வகையில் அமைந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.