ஹைக்கூ:
தான் செய்த ஒரு தவறு காரணமாக காலேஜியில் இருந்து நீக்கப்படுகிறார் ஹீரோ ஏகன். முழுக்க பெண்கள் மட்டுமே படிக்கும் ஒரு காலேஜில் இவர் மட்டும் ஆண் ஆக சேருகிறார். அதெப்படி? கோவையில் அந்த காலேஜில் படிக்கும் ஸ்ரீதேவி அப்பல்லாவை காதலிக்கிறார். அந்த காதல் பிரேக் அப் ஆனது ஏன்? சென்னையில் பெமினாஜார்ஜை காதலிக்கிறார். அந்த காதல் பிரேக் அப் ஆனதா? ஏகனுக்கு என்ன பிரச்னை? கடைசியில் எந்த காதல் சக்சஸ் ஆனது என்பதே ஹைக்கூ படத்தின் கதை. யுவராஜ் சின்னசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
காதல் கதையுடன் கொஞ்சம் சைக்காலஜி, ஆண்களின் இன்னொரு பக்கம், அதனால் பாதிக்கப்படும் காதல், காதலிகள் என மாறுபட்ட கதைகளத்தில் படத்தை இயக்கியிருக்கிறார் யுவராஜ் சின்னசாமி. ஜோ பட இயக்குனர் ஹரிகரன் திரைக்கதை, கதையில் உறுதுணையாக இருந்து இருக்கிறார். என்னது, ஒரு லேடீஸ் காலேஜில் ஒரே ஒரு ஆணா? என்ற ஆச்சரியத்துடன் கதை நடக்கிறது. தனி ஆணாக அந்த காலேஜில் ஹீரோ படுகிறபாடு, பாத்ரூம் இல்லாமல் தவிப்பது, காதல் ஆகியவை ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, பக்கத்து வீட்டு பெண் மாதிரி இயல்பாக இருக்கிற ஸ்ரீதேவியுடனான லவ் சீன், அதில் வரும் பிரச்னைகள், ஹீரோவின் அதீத அக்கறை ஆகியவை புதுசு
அந்த காதல் முறிந்தவுடன் சென்னை வந்து வேலை பார்க்கிறார் ஹீரோ ஏகன், அங்கே தனது ஆபீசில் வொர்க் பண்ணும் பெமினாவை காதலிக்கிறார். இருவரும் லிவ்விங் டு கெதர் ஆக இருக்கிறார். பெமினாவுக்கு முன்பே ஒரு டார்ச்சர் காதலன் என்ற ரீதியில் கதை பயணிப்பது விறுவிறுப்பாக இருக்கிறது. பெமினா அழகு, செல்லப்பேச்சு, காதல் சீன்கள், ஹீரோவின் சில விஷயங்களை உணர்ந்து அவர் தவிப்பது ஆகியவை நல்ல சீன்கள். இரண்டு காதலிகளும் ஒரு இடத்தில் சந்திப்பதும், அடுத்து நடக்கும் விஷயங்களும் செம.
ஹீரோ நண்பனாக வரும் அதிர்ச்சி அருண் கேரக்டரும் துறுதுறுப்பும், காமெடியும் பல இடங்களில் படத்தை காப்பாற்றி இருக்கிறது. ஏகன் கேரக்டர், அவரின் அதீதஆர்வம், சில கேள்விகள், சில செயல்கள், அதனால் ஏற்படும் பிரச்னைகள்தான் கதையில் கரு. அதை முதலில் சொல்லாமல், கடைசியில் கொஞ்சம், கொஞ்சமாக விரிவு படுத்தி காண்பித்தது நல்ல திரைக்கதை. காதல் சம்பந்தப்பட்ட சீன்களில், கடைசியில் இன்னொரு குணத்துக்கு மாறும் சீன்களில் ஹீரோ நடிப்பு ஓகே. இரண்டு ஹீரோயின்களும் கதைக்கு பிளஸ். அதேபோல், சித்துகுமார் இசையும், பாடல்களும் ஓகே.
இன்றைய யூத், லவ்வர்கள் ரசிக்கும்படி காதல், அதனால் ஏற்படும் பிரச்னைகள், சில ஆண்களில் உளவியல் ரீதியிலான பிரச்னைகள், காதல் என்ற பெயரில் டார்ச்சர் செய்வதை, ஆண்களின் இன்னொரு முகத்தை புது கோணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். காதல் என்ற பெயரில் பெண்கள் அனுபவிக்கும் மன ரீதியிலான சில விஷயங்களை விரிவாக சொல்லியிருப்பது புதுமை. அதை இரண்டு காதல் மூலம் யூத்புல்லாக, கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். என்ன, வழக்கமான காதல் கதை மாதிரி படத்தை முடித்து இருப்பது ஏமாற்றம், அதில் இன்னும் கொஞ்சம் வித்தியாசப்படுத்தி காண்பித்து இருக்கலாம்.

418:
ஒரு மெடிக்கல் காலேஜ் பில்டிங்கில் 418 என்ற அறையில் சில மர்மமான விஷயங்கள் நடந்து இருக்கிறது. அந்த அறையில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக, அதை 15 ஆண்டுகளாக பூட்டி வைத்து இருக்கிறார்கள். ஆனால், புதுசாக சேரும் மாணவர்கள் பெட் கட்டி, அந்த அறைக்குள் செல்ல முயற்சிக்கிறார்கள். பக்கத்து அறையில் வசிக்கும் மாணவன் சூர்யராஜ்க்கு மனரீதியாக பல பாதிப்புகள் ஏற்படுகிறது. அதை மனநல டாக்டரிடம் சொல்ல, அவர் அங்கே சைத்ராவுக்கு நடந்ததை விவரிக்கிறார்.
பிளாஷ்பேக்கில் நாட்டுப்புற கலைஞரான சைத்ரா காதல் திருமணம் செய்கிறார். ஆனால், அவருக்கு குழந்தை இல்லை. குடும்பத்தில் பிரச்னை பிறக்க , அவர் மனநிலை பாதிப்புக்கு ஆளாகிறார். ஒரு துஷ்ட சக்தியிடம் போக, 6 பெண்களை எனக்குபலி கொடுத்தால் உன் ஆசை நிறைவேறும் என்கிறார். குழந்தை ஆசையில் சில பெண்களை பலி கொடுக்க, ஒரு கட்டத்தில் அவரை 418 அறையில் அடைத்து வைத்து ட்ரீட்மென்ட் கொடுக்கிறார்கள். அங்கே நடந்தது என்ன? சைத்ரா என்ன ஆனார். கடைசியில் பேய் ஆக வரும் சைத்ராவின் பலி வேட்டையை தொடர்ந்தா? மாணவர்களுக்கு என்ன ஆனது என்பது 418 படத்தின் கதை.
பேய் படங்களில் இது கொஞ்சம் வித்தியாசமானது. தாய் பாசத்துக்காக பலி கொடுக்கிற கேரக்டரில் சைத்ரா வருகிறார். அதற்கு முன்பு அவரின் நாட்டுப்புற கலைஞர் சம்பந்தப்பட்ட பாடல்கள், குடும்பத்தில் அனுபவிக்கிற பிரச்னைகள், துஷ்ட சக்தி ஆதரவாளராக மாறியவுடன் எடுக்கிற முடிவுகள் விறுவிறுப்பு. சைத்ராவை சுற்றியே கதை நடக்கிறது. அவரின் மாறுபட்ட முகங்கள், அப்படி வரும் நடிப்பு பிரமாதம். குறிப்பாக, நாட்டுப்புற கலைஞராக அவர் கோபத்தில் ஆடுவது, பலி கொடுக்கும் சீன்கள் மிரட்டல். இடைவேளைக்குபின் அவரை பேய் ஆக காண்பிக்கிறார்கள். அதில் தெளிவு இல்லை. ஒளிப்பதிவு, இருட்டு காரணமாக, யார் பேய், என்ன நடக்கிறது என்பதில் குழப்பம்.
மருத்துவ கல்லுாரி மாணவர்களாக சரண், சாஷாங், வைஷ்ணவ், ப்ரீத்தி உள்ளிட்டவர்கள் வருகிறார்கள். இதில் ப்ரீத்தி நடிப்பும், அவர் கேரக்டர் பின்னணியும் புதுசு. படத்தின் முதற்பாதி கல்லுாரி, சைத்ரா பின்னணி, பிளாஷ்பேக் என செல்கிறது. பிற்பாதி முழுக்க, அந்த பில்டிங்கில் துரத்தல், பேய், அமாஷ்யம், பலி என ஓடுகிறது. மருத்துவ கனவுடன் கல்லுாரி வரும் மாணவன், அவனுக்கு ஏற்படும் பிரச்னைகள், சைத்ராவின் கேரக்டர், பலி வாங்கும் சக்தி, 418 அறை மர்மம் என மாறுபட்ட கதை எழுதியிருக்கிறார் இயக்குனர். பேய் சம்பந்தப்பட்ட சீன்களில், அந்த துஷ்ட சக்தி சம்பந்தப்பட்ட இடங்களில் பயம் வருகிறது. ஆனாலும், தாய்பாசத்துக்காக ஒரு நல்ல கலைஞர் இப்படி மாறுவாரா என்பதில் அழுத்தம் இல்லை. கிளைமாக்சிலும் குழப்பம். திரைக்கதையில் நேர்த்தி இல்லை. அது ஏமாற்றத்தை தருகிறது. ஒரு பழைய பில்டிங், அதில் பேய், நாலைந்து பேரை துரத்துவது இதெல்லாம் பல படங்களில் பார்த்தது. ஆனாலும், திவாகர் ஒளிப்பதிவு, வெங்கி இசை ஆகியவை நல்ல திரில்லர் எபக்ட்டை தருகின்றன. கன்னட படத்தின் தமிழ் டப்பிங் என்பதால், நிறைய விஷயங்களில் தமிழ் டச் இல்லை. ஆனாலும், திரில்லர் விரும்பிகளுக்கும் மட்டும் படம் பிடிக்கும்

மீனாட்சி சுந்தரம், சிறப்பு செய்தியாளர்.




