ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 330 மெகாவாட் திறன் கொண்ட தோல்பூர் எரிவாயு மின் நிலையத்தில், கடந்த அக்டோபர் மாதத்தில் ஒரு யூனிட் மின்சார உற்பத்திச் செலவு ரூ.46.09 வரை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அக்டோபர் முதல் 12 நாட்களில் மட்டும், இம்மின் நிலையம் ரூ.30 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான மின்சாரத்தை வழங்கியுள்ளது. ஒரு யூனிட் மின்சார உற்பத்திக்கான செலவு ரூ.41 முதல் ரூ.46 வரை இருந்துள்ளது. ஒப்புதல் பெற்ற கட்டணத்துடன் கூடிய மின் கொள்முதல் ஒப்பந்தம் இல்லாததால், இந்தச் செலவை மின் பகிர்மான நிறுவனங்களிடமிருந்து திரும்பப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த ராஜஸ்தான் விவகாரத்தை சுட்டிக்காட்டி அமைச்சர் நிர்மல் குமார் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது மத்திய மின்துறை அமைச்சகத்தின் முக்கியமான திட்டமிடல் குறைபாடு” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாடு முழுவதும் மின்சாரத் தேவை மற்றும் உற்பத்தி கிடைக்கும் நிலவரம் குறித்த தகவல்களை மாநில அரசுகளைவிட மத்திய மின்துறை அமைப்புகள் விரிவாக அறிந்திருக்கக்கூடிய சூழலில், இத்தகைய மின்சாரப் பற்றாக்குறையை முன்கூட்டியே கணித்து திட்டமிடாதது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய அளவில் மின்சாரத் தேவையை முன்கூட்டியே கணிப்பதுடன், மாநில அரசுகளுடன் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்த மத்திய மின்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதன் மூலம் எதிர்காலத்தில் அதிக விலை கொடுத்து அவசரமாக மின்சாரம் வாங்க வேண்டிய நிலையைத் தவிர்க்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்திலும் அண்மையில், மத்திய மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி குறைவு காரணமாக ஏற்பட்ட மின்சாரப் பற்றாக்குறையைச் சமாளிக்க, ஒரு யூனிட் மின்சாரத்தை அதிகபட்சமாக ரூ.37 வரை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். உச்சகட்ட மின்தேவை சுமார் 20,000 மெகாவாட்டை நெருங்கிய நிலையில், இத்தகைய அதிக விலை மின் கொள்முதல் விவகாரம் கவனம் பெற்றுள்ளது.




