விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் காய்கறி மாலைகளை கழுத்தில் அணிந்து கொண்டு கண்டனத்தை வெளிப்படுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மாநகரம் கொலை மாநகரமாக மாறியுள்ளது என்றும், தமிழ்நாட்டில் எந்த வளர்ச்சியும் இல்லை எனவும் தெரிவித்தார். விலைவாசி உயர்வு, வரி உயர்வுகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என சாடினார்.
விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டக்களத்திற்கு கொண்டுவரப் பிரம்மாண்ட வடிவிலான தக்காளியை அனுமதிக்காததால் போலீசாருக்கும், அதிமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுரை பெத்தானியாபுரத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுகவினர் திமுக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அதேபோல் நெல்லையில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், கழக தேர்தல் பிரிவு செயலாளரும், மாநகர் மாவட்டச் செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமையில் விலைவாசி உயர்வைக் கண்டித்து குமரன் நினைவகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுகவினர் திமுக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து பேசிய பொள்ளாச்சி வி.ஜெயராமன் திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, மின் கட்டணம், வீட்டு வரி உயர்வால் ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அதிமுகவுக்கு துரோகம் செய்து சென்றவர்கள் அனைவரும் மிக விரைவில் சிறைக்குச் செல்வார்கள் என தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் முன்னாள் அமைச்சர் தங்கமணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- பி.ஜேம்ஸ் லிசா










