குற்றாலத்தில் உள்ள ஹோட்டல்களில் தரமற்ற உணவுப் பொருட்கள்
வழங்கப்படுவதாக புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மேற்கொண்ட ஆய்வில் கெட்டுப்போன 50 கிலோ இறைச்சி மற்றும் நூடுல்ஸ் போன்ற உணவு பொருள்களை அழித்தனர்.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் பகுதியில் தற்போது சீசன் காலகட்டம் தொடங்கி உள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் குற்றாலம் பகுதிக்கு வருகை தந்து அருவிகளில் ஆனந்த குளியலிட்டு அந்தப் பகுதிகளில் உள்ள உணவகங்களில் உணவருந்தி வருகின்றனர்.
குறிப்பாக, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா
பயணிகள் குற்றாலம் பகுதியில் உணவருந்தும் போது, சில உணவகங்களில் தரம் குறைந்த உணவுகள் வழங்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
இது தொடர்பான புகார்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு சென்றது. இந்த நிலையில் நேற்று தென்காசி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நாகசுப்பிரமணியன் குற்றாலம் பகுதியில் உள்ள உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, ஒரு சில உணவகங்களில் கெட்டுப் போன இறைச்சிகள் மற்றும் சாப்பிட தகுதியில்லாத உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழித்து வருகிறார்.
அந்த வகையில், இன்று குற்றாலம் பகுதியில் செயல்பட்டு வரும் நிலா என்ற உணவகத்தில்
நடைபெற்ற சோதனையில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த கெட்டுப்போன 50 கிலோ இறைச்சி மற்றும் நூடுல்ஸ், ரைஸ் உள்ளிட்ட உணவு பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பது துறை அதிகாரிகள் அதனை
பினாயில் ஊற்றி அளித்தார். இது போன்ற தரமற்ற உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஹோட்டல் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீ.மரகதம்









