மணிப்பூர் வீடியோ விவகாரம் குறித்து பிரதமர் இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும்: இந்தியா கூட்டணி!

மணிப்பூர் வீடியோ விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கூறியுள்ளது. மணிப்பூரில் குக்கி- சொமி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்கள்,  நிர்வாணப்படுத்தப்பட்டு,…

மணிப்பூர் வீடியோ விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கூறியுள்ளது.

மணிப்பூரில் குக்கி- சொமி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்கள்,  நிர்வாணப்படுத்தப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் கலவரம் தொடங்கிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது. சுமார் 2 மாதங்களுக்கு முன்பாக இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில் வீடியோ வெளியான நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிக கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சம்பந்தப்பட்ட நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், நாடாளுமன்றம் ஆரம்பித்த முதல் நாளே ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இன்றே விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன.

மணிப்பூர் விவகாரத்தில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் ஒரு அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், “மே 3-ம் தேதி முதல் மணிப்பூரில் நடப்பது குறித்து இரு அவைகளிலும் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகு தான் விவாதங்கள் நடைபெறும். இதுதான் அவையின் முதன்மை அலுவலாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.