வங்கக்கடலில் இன்று உருவாகிறது புயல் – எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவி வருகிறது. இந்த நிலையில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) இன்று உருவாக வாய்ப்புள்ளது. இந்தப் புயல் சின்னம் நகரும் திசையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக இன்று முதல் மே 30ம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கேரள எல்லைப் பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்றும் நாளையும் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மே 29 மற்றும் 30ம் தேதிகளில் கோவை, திருநெல்வேலி, நீலகிரி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனால், இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.