கோவையில் களிமண்ணால் செய்யப்பட்ட குளிர்சாதன பெட்டியை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
கோவை கணபதி பகுதியில் வசிக்கும் விவசாய குடும்பத்தை சேர்ந்த கனகராஜ் இயற்கை சார்ந்த களிமண் பொருள்களை தனது சிறு வயதில் இருந்து செய்து, மலிவு விலையில் கொடுத்து வருகிறார். கோடைகாலம் என்பதால் தற்போது இந்த குளிர்சாதன பெட்டியை செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளார். களிமண்ணால் செய்யப்பட்ட மின்சாரம் இல்லாத குளிர்சாதன பெட்டியை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
இந்த குளிர்சாதன பெட்டி தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி, உணவு, காய்கறிகள் மற்றும் பால் போன்றவற்றை இயற்கையாகவே பல நாள்கள் கெட்டுப் போகாமல் வைத்திருக்க முடியும் என கூறப்படுகிறது. இந்த குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட உணவு பொருட்களால் உடல் நலத்திற்கு தீங்கு எதுவும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், தண்ணீரை ஆவியாக்குவதன் மூலமாக இயக்கப்படுகிறது.
இந்நிலையில் மின்சாரம் செலவு இல்லாததாலும், மேலும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காது என்பதாலும் மக்கள் இதை ஆர்வமுடன் வாங்கி செல்வதாக கனகராஜ் கூறுகிறார். இந்த இயந்திரம் கொரோனாவிற்கு முன்பு கண்டு பிடிக்கப்பட்டாலும், தற்போது தான் விற்பனை சூடுபிடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த குளிர்சாதன பெட்டி குறித்து கனகராஜ் கூறுகையில் ”தினமும் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றினால் போதுமானது. காய்கறிகள், பழங்கள், பால், குளிர்பானங்கள், மருந்துப்பொருட்கள் மற்றும் பல பொருட்களை வைத்துக் கொள்ளலாம். உள்ளே வைக்கும் காய்கறிகள் பழங்கள் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை மற்றும் உணவுப் பொருட்கள் ஒன்று முதல் இரண்டு நாட்கள் வரை கெடாமல் சுவை மாறாமல் இருக்கும். பராமரிப்பு செலவு இல்லை, மற்றும் மின்சார குளிர்சாதன பெட்டியை விட பல மடங்கு ஆரோக்கியமானது. தமிழ்நாடு, கேரளா மாநிலத்தில் தொடர்ந்து ஆடர்கள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது இதன் விலை ரூ.8500-க்கு விற்பனை செய்கிறோம், உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் விலை குறைய வாய்ப்புள்ளது” என கூறினார்.







