வெனிசுலா அதிபரை கைது செய்த அமெரிக்கா ; டிரம்ப் அதிரடி அறிவிப்பு…!

வெனிசுலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோவை கைது செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையே கடந்த சில நாட்களாகவே மோதல் போக்கு நிலவி வந்தது. அமெரிக்காவுக்குள் ஃபெண்டானில் என்னும் போதைப் பொருள் ஊடுருவ நிகோலஸ் மதுரோவே  காரணம் என டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார். மேலும் வெனிசுலாவுக்கு பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளார்.  அதே நேரம் டிரம்பின் குற்றச்சாட்டை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ முற்றிலுமாக மறுத்துள்ளார்.

இந்த சூழலில் இன்று அதிகாலை 2 மணியளவில் வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த நிலையில் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை கைது செய்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், ”வெனிசுலா மீது ஒரு பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. வெனிசுலா அதிபர் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸு கைது செய்யப்பட்டு, நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. அடுத்த கட்ட விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.