உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் 2023 புத்தாண்டு பிறந்தது. இதனையடுத்து அந்நாட்டின் ஆக்லாந்து உள்ளிட்ட நகரங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
2023 புத்தாண்டை வரவேற்க உலக மக்கள் தயாராகி வரும் நிலையில், உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்தது. இதனை முன்னிட்டு ஆக்லாந்தில் உள்ள ஸ்கை டவர் கோபுரத்தில் கவுண்ட் டவுனுடன் புத்தாண்டை மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
புத்தாண்டு பிறந்ததையடுத்து மக்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கண்ணை கவரும் வகையில் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. ஆக்லாந்து நகரின் ஸ்கை டவர், ஹார்பர் பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் ஒன்று கூடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் பெரிதளவில் களைகட்டாமல் இருந்தன. இந்நிலையில், 2023 எனும் புதிய ஆண்டு கொண்டாட்டங்களுடன் பிறந்துள்ளது.







