திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் ஆலயத்தில் உலக புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் சன்னிதானம் அமைந்துள்ளது. பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர் விடுமுறை காரணமாகவும் இன்று அதிகாலை முதலே சனீஸ்வர பகவானை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதுச்சேரி மற்றும் சென்னை, திருச்சி, கடலூர், காஞ்சிபுரம், சேலம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதன் காரணமாக கோவில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து புனித திருத்தலமான நலன் தீர்த்த குளத்தில் வரிசையில் நின்று குளித்து தங்கள் தோஷங்கள் நீங்க பக்தர்கள் புனித நீராடி வந்தனர். மேலும் காரைக்கால் மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு உள்ள நிலையிலும் கொட்டும் பனியிலும் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து சனீஸ்வர பகவானுக்கு அர்ச்சனைகள், அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் எள் தீபம் ஏற்றி தங்களது தோஷங்கள் நீங்க வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.
இதன் காரணமாக திருநள்ளாற்றில் அதிக அளவு பக்தர் வருகையால் பாதுகாப்பிற்காக மாவட்ட முதுநிலை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் தலைமையில் திருநள்ளாறு பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.