மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தி வருகிறார்கள். தொடர்ந்து எம்.ஜி.ஆர் நினைவிட நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டிருக்கக் கூடிய மேடையிலே நினைவு நாளின் உறுதி மொழியானது ஏற்கப்பட்டது.
https://twitter.com/EPSTamilNadu/status/1606481493483991048?cxt=HHwWkMDR1YSar8ssAAAA
முன்னதாக தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்-க்கு எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் புகழஞ்சலி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், வாரி வாரிக் கொடுத்த வள்ளல், சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர், மக்கள் இதயத்தில் நீக்கமற வாழ்ந்து வரும் இதயக்கனி, எம் தலைவன் அவர்களின் நினைவுநாளில் அவர் வகுத்து தந்த பாதையில் பயணிப்பதையே பெருமையென கொண்டு, புரட்சித் தலைவருக்கு எங்கள் புகழஞ்சலி என பதிவிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 4-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாள் அன்றும் அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







