முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடனா? பாமக தலைவர் அன்புமணி அறிக்கை

தமிழ்நாடு அரசு அதன் செலவுகளை சமாளிப்பதற்காக ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மட்டும் கடன்பத்திரங்கள் மூலமாக ரூ.51 ஆயிரம் கோடி நிதி திரட்ட முடிவு செய்திருப்பது கவலையளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது; ” 2022-23 ஆம் நிதியாண்டில் ஏப்ரல் மாதம் முதல் திசம்பர் மாதம் வரையிலான முதல் 9 மாதங்களில் இந்திய ரிசர்வ் வங்கி வாயிலாக கடன் பத்திரங்கள் மூலம் பெறப்படும் கடனின் அளவு ஒப்பீட்டளவில் சற்று குறைவாகவே இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் ரூ.52,000 கோடி கடனாக பெறப்பட்டிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் ரூ.49 ஆயிரம் கோடி மட்டும் தான் கடன்பத்திரங்கள் மூலம் கடனாக பெறப்பட்டிருந்தது. ஆனால், கடந்த நிதியாண்டின் கடைசி 3 மாதங்களில் ரூ.35,000 கோடி மட்டுமே கடனாக பெறப்பட்டிருந்த நிலையில், இப்போது அதை விட 45.7 விழுக்காடு அதிகமாக ரூ.51,000 கோடி கடனாக பெறப்படவுள்ளது. இது கடந்த 9 மாதங்களில் பெறப்பட்ட கடனை விட அதிகம் என்பது தான் தமிழகத்தின் பொருளாதார நிலை குறித்த கவலையை அதிகரிக்கச் செய்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

10விழுக்காட்டிற்கு அதிகம்

2021-22ஆம் நிதியாண்டில் வாங்கப்பட்ட தமிழகத்தின் மொத்தக் கடன் ரூ.87,000 கோடி மட்டுமே. 2022&23ஆம் நிதியாண்டில் தமிழக அரசு வாங்க உத்தேசித்திருந்த நிகரக் கடன் ரூ.90,116.52 கோடி மட்டும் தான். ஆனால், இந்த இலக்கைக் கடந்து மாநில வளச்சிக் கடன் என்ற பெயரில் ரிசர்வ் வங்கி வாயிலாக கடன்பத்திரங்கள் மூலம் பெறப்படும் கடனின் அளவு மட்டுமே ஒரு லட்சம் கோடி ரூபாயை தொட்டிருக்கிறது. இது இலக்கு நிர்ணயிக்கப்பட்டதை விட 10 விழுக்காட்டுக்கும் அதிகமாகும்.

தமிழக அரசின் வருவாய் ஒப்பீட்டளவில் சிறப்பாகவே உள்ளது. நடப்பு நிதியாண்டின் அக்டோபர் மாதம் வரையிலான 7 மாத காலத்தில் தமிழகத்தின் மொத்த வருவாய் ரூ.1.29 லட்சம் கோடி ஆகும். இது கடந்த ஆண்டின் இதேகாலத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருவாயை விட 28.30% அதிகம் ஆகும். நடப்பாண்டின் வருவாய் இலக்கான ரூ.2.31 லட்சம் கோடியை எளிதாக எட்டிவிடும் வகையிலேயே தமிழக அரசின் பொருளாதார செயல்பாடுகள் உள்ளன. வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறையும் அக்டோபர் மாதம் வரை கட்டுக்குள்ளாகவே உள்ளன. அவை கவலையளிக்கும் வகையில் இல்லை.

கடனைக் கட்டுப்படுத்த வேண்டும்

ஆனால், தாமதிக்கப்பட்ட செலவுகளுக்காக கடைசி 3 மாதங்களில் அதிக நிதி ஒதுக்கப்படவிருப்பது தான், அதிக அளவில் கடன் வாங்கப்படுவதற்கு காரணமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எப்படியாக இருந்தாலும் தமிழகத்தின் கடன் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட இலக்கை விட அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் வேண்டும்.

2022-23 ஆம் ஆண்டின் நிறைவில் தமிழக அரசின் நேரடிக் கடன் மட்டும் ரூ.6.53 லட்சம் கோடியாக இருக்கும். இதற்கான வட்டியாக மட்டும் நடப்பாண்டில் ரூ.48,121 கோடி செலவிடப்படவுள்ளது. இது தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாயான ரூ. 1.42 லட்சம் கோடியில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகம் ஆகும். நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் மூலதன செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.43,043 கோடி மட்டும் தான். மூலதன செலவுகள் தான் தமிழகத்தின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தி, மாநிலத்தின் வளர்ச்சிக்கு வகை செய்யக்கூடியவை ஆகும். ஆனால், மாநிலத்தின் வளர்ச்சிக்கான மூலதன செலவை விட அதிக தொகையை கடனுக்காக செலவிட்டால், தமிழகம் எவ்வாறு வளர்ச்சி அடைய முடியும்?

2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய தமிழக நிதியமைச்சர், அடுத்த சில ஆண்டுகளில் வருவாய்ப் பற்றாக்குறை இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். வருவாய் பற்றாக்குறையை ஒழிப்பது என்பது காலத்தின் கட்டாயம். அதற்கான நடவடிக்கைகள் கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டும். ஆனால், அந்த திசையை நோக்கி தமிழ்நாடு பயணிப்பதாக தெரியவில்லை.

அரசின் நடவடிக்கை தேவை

தமிழ்நாடு மீள முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்ளக்கூடாது. அதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டின் வருவாயை ஆக்கப்பூர்வமான வழிகளில் அதிகரிக்கவும், கடன் சுமையை கணிசமாக குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram