தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டுமென நியாயமான கோரிக்கையை முன்வைத்துப் போராடும் ஊராட்சி செயலாளர்களைக் கைது செய்வது, பணியிட மாறுதல் செய்வது, பணியிடை நீக்கம் செய்வது போன்ற பாசிச நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபடுவது கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே, தனது திறனற்ற நிர்வாகத்தால் முறையான வசதிகளின்றியும், கிராம சபைக் கூட்டம் நடத்தப்படாமலும், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமலும் சீரழிந்து வரும் ஊரக நிர்வாகத்தை மேலும் சிதைக்கும் வண்ணம், ஊராட்சி செயலாளர்கள் நலனையும் திமுக அரசு உதறியெறிவது நியாயமா?
தேர்தல் நெருங்கியதும் ஏனோதானோவென அவசரகதியில் ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து, பெருமை பீற்றிக் கொள்வதில் காட்டிய அக்கறையில் சிறு துளியேனும் அதனைச் செயல்படுத்துவதிலும், அனைத்துத்தரப்பட்ட ஊழியர்களை இணைப்பதிலும் அக்கறை காட்டாத அறிவாலயம் அரசை, இனி என்றும் அரசு ஊழியர்கள் மன்னிக்க மாட்டார்கள்! போலி வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய திமுக அரசுக்குத் தேர்தலில் ஏமாற்றத்தைப் பரிசளிப்பர்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







