விருத்தாசலத்தில் 5 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரத்தில், திமுக கவுன்சிலரும், தனியார் பள்ளி தாளாளருமான பக்கிரிசாமியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சியின் 30-வது வார்டு திமுக கவுன்சிலராக பக்கிரிசாமி. இவர் விருத்தாசலம் பகுதியில் நர்சரி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இதனிடையே அங்கு பயின்று வரும் 6 வயது சிறுமி ஒருவர் நேற்று வீடு திரும்பிய நிலையில், அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர், சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றம்செய்வோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
இதுகுறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் பக்கிரிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பக்கிரிசாமி திமுகவில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.







