அம்பேத்கரை கையில் எடுக்கிறாரா தளபதி விஜய்?

அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று, விஜய் மக்கள் இயக்கம் சார்பில், அம்பேத்கரின் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நடிகர் விஜய்…

அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று, விஜய் மக்கள் இயக்கம் சார்பில், அம்பேத்கரின் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஜய். இவர் என்ன செய்தாலும் அதை திருவிழா போன்று கொண்டாடி தீர்த்துவிடுவார்கள் அவரது ரசிகர்கள். அப்படிப்பட்ட இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, அரசியலிலும் தீவிரமாக இறங்கி செயல்பட வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இது தொடர்பாக தனது பழைய பேட்டி ஒன்றில், தளபதி விஜய்யே கூறியிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக, தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கம் சார்பில், பல்வேறு மக்கள் நல பணிகளை அவ்வப்போது தன்னுடைய ரசிகர்கள் மூலமாக செய்து வருகிறார்.

இந்த நிலையில், அரசியலில் ஈடுபடும் தன்னுடைய முதல் முயற்சியாக, டாக்டர் அம்பேத்கரை, கையில் எடுத்துள்ளார் நடிகர் விஜய். வருகின்ற ஏப்ரல் 14-ஆம் தேதி சட்டமேதை அம்பேத்கரின் 132 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அம்பேத்கரின் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று அனைத்து நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதனை செயல்படுத்தும் விதமாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதோடு, தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடுவது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதில் மாவட்டம்தோறும் நடக்கும் இவ்விழாவில், அனைத்து அணி தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என்றும், காவல்துறையினரிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்றும், அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் திமுக, அதிமுகவை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்திலும் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிக்காக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கு துவக்கப்பட்டு 10 லட்சம் பேர் தற்போது பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் மே மாதம் வரை ஒவ்வொரு மாவட்டவாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறுகிறது. விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புதிய படிவம் விரைவில் வழங்கப்பட உள்ளது. அந்த படிவத்தில் அரசியல் இயக்கம் தொடங்குவதற்கான ஒப்புதல் மற்றும் ஆலோசனைகள் குறித்து இருப்பதாக மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான படிவமும் வழங்கப்பட உள்ளது. ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரசியல் கருத்துக்களை தனது படங்கள் மூலம் வெளிப்படுத்தி வரும் விஜய், முதன்முறையாக அரசியல்ரீதியாக அம்பேத்கர் பிறந்த நாளை அதிக அளவில் கொண்டாடும் தலித் மக்களின் ஆதரவை பெற வேண்டும் என்பதற்காக, இந்த மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்வை கையில் எடுத்து உள்ளாரா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.