“பருத்திவீரன்” பட பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்!

பருத்திவீரன் திரைப்படத்தில் “ஊரோரம் புளியமரம்” பாடலை பாடிய கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள் (வயது 75). இவர், தென் மாவட்டங்களில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று கிராமிய பாடல்களை பாடி இருக்கிறார். இதனை தொடர்ந்து 2007-ம் ஆண்டு இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான ‘பருத்தி வீரன்’ படத்தில் “ஊரோரம் புளியமரம்” பாடல் பாடி லட்சுமி அம்மாள் நடித்திருந்தார். இவருக்கு தமிழ்நாடு அரசு கலை மாமணி விருதும், தேசிய தமிழ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இருதய கோளாறு காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த பாடகி லட்சுமி அம்மாள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து கிராமிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் இருந்தார். பொருளாதார ரீதியில் கடும் சிரமத்தை சந்தித்து வந்த லட்சுமி அம்மாளின் மருத்துவ உதவிக்கு நடிகர் கார்த்தி மாதம் தோறும் உதவித் தொகையும் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 75 வயதாகும் லட்சுமி அம்மாள் வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். இவரது மறைவிற்கு திரைப்பட துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.