தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 2026-இல் நடைபெறவுள்ளது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார். தேர்தல் கூட்டணிகளை முடிவு செய்யும் பணியிலும் அதிமுக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, டிச.31-ம் தேதி (இன்று) எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக எம்ஜிஆர் மாளிகையில், 31.12.2025 (இன்று) காலை 10 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையில் இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தில், தேர்தல் பணிகள், கூட்டணி விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் டி.டி.வி.தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்று பாஜக திட்டவட்டமாக கூறிய நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அரசியல் களத்தில் முக்கியவத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.







