தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஒரு பெண் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூரையடுத்த கஞ்சப்பள்ளி சோதனை சாவடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வடமாநிலத்தவர் இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனையிட்ட போது, அதில் 5 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சாவை பதுக்கி வைத்து இருப்பதை கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றை பதுக்கி வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பீஷ்வர்சாகு, அலோக்நாயக் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் சிலர் கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அங்கு திடீர் சோதனை நடத்திய போலீசார், ஜெயா என்பவரை கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ கஞ்சா மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஞானியாகபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, போலீசாரை கண்டு 2 பேர் தப்பியோடியுள்ளனர். அதில், தேவதாஸ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, அவரிடம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து தேவதாசை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கோகுல் பிராசத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மணல்மேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.







