தான் ராஜினாமா செய்யப் போவதாகப் பரவும் தகவலில் உண்மை இல்லை என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக பாஜகவில் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவனியின் தலையீடு அதிகமாக இருப்பதாகக் கூறி, கட்சி எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் உட்பட பலர் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று செய்திகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், டெல்லி சென்றுள்ள கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பிரதமர் மோடியை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடகாவில் கொரோனா தடுப்பு மற்றும் மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.
மேலும், அடுத்த மாதம், தான் மீண்டும் டெல்லி வர இருப்பதாகவும் கர்நாடகாவில் புதிய வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தான் ராஜினாமா செய்வதாக பரவும் தகவலில் உண்மை இல்லை எனவும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பு குறித்து எடியூரப்பா கூறும்போது, கர்நாடகாவில் மீண்டும் ஆட்சிக்கு வர கடுமையாக உழைக்கும்படி அமித் ஷா கேட்டுக்கொண்டார். உத்தரபிரதேசத்தை போல கர்நாடகாவிலும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றும் கர்நாட காவுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாகவும் தெரிவித்தார். பிரதமர் சொன்னதை போலவே, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று அமித்ஷாவும் என்னிடம் சொன்னார் என தெரிவித்தார்.








