“இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை திமுக அரசு காலில் போட்டு மிதிக்கிறது” – எல்.முருகன் பேட்டி!

வழிபாட்டு உரிமையை திமுக அரசு காலில் போட்டு மிதிக்கிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற கோரி தீக்குளித்து உயிரிழந்த மதுரை நரிமேடு மருதுபாண்டியர் நகர் பகுதியைச் சேர்ந்த பூரண சந்திரன் வீட்டிற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். தொடர்ந்து குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், “திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பூரண சந்திரன் தன்னுடைய தியாகத்தை செய்திருக்கிறார். தர்மத்தை காக்க வேண்டும் என்றால் உயிரோடு இருந்து அதற்காக போராடி வெல்ல வேண்டும். அவருடைய தியாகம் நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறும்.

பூரண சந்திரனின் இழப்பிற்கு காரணம் திமுக அரசு தான். இதற்கு திமுக அரசாங்கம் தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும், ஸ்டாலின் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். திமுக அரசு உயிர்தியாகம் செய்த பூரண சந்திரன் வீட்டுக்கு கூட வரவில்லை,

நிச்சயமாக திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். திமுகவின் நிர்வாகியான பூரணசந்திரன் பாஜக கட்சியில் இல்லை. கார்த்திகை நாளில்  திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது உலகம் முழுவதிலும் இருக்கின்ற முருக பக்தர்களுடைய கோரிக்கையாக இருக்கிறது. அந்த கோரிக்கையைத் தான் பூரண சந்திரன் இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார். அதை திமுக அரசு கொச்சைப்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற வேண்டும் என்பது 50 ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கை, இதற்காக ஒவ்வொரு வருடமும் கைது செய்வது திருப்பி அனுப்புவது என தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நியாயமாக பக்தர்கள் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார்கள் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய திமுக அரசு ஓட்டு அரசியலுக்காக திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை பக்தர்கள் உணர்வாக பார்க்க வேண்டும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை திமுக அரசு காலில் போட்டு மிதிக்கிறது. உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த பிறகும் உத்தரவை மதிக்காத அரசாங்கமாக இருந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் தமிழக மக்களுக்கும், முருக பக்தர்களுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.