தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே கோடை வெயின் தாக்கம் அதிகமாகி வருகிறது. இனி வரும் நாட்களிலும் வெப்பநிலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தென் தமிழகம் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் மழை பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் வெப்பநிலை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, தமிழக்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது.
- பி.ஜேம்ஸ் லிசா








