சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக நான்கு நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இதனால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது 60 நீதிபதிகள் பணியாற்றி வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.சக்திவேல், சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால், சென்னை தொழிலாளர் நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.குமரப்பன், கோவை மாவட்ட முதன்மை நீதிபதி கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக ஆர்.சக்திவேல், ‘பி.தனபால், சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரது பதவியேற்பு நிகழ்ச்சி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. புதிய நீதிபதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக பொறுப்பேற்ற நீதிபதிகளை தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் வரவேற்றார். இதையடுத்து புதிய நீதிபதிகளுடன் சேர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 11 நீதிபதிகள் பதவிகள் காலியாக உள்ளன.
- பி.ஜேம்ஸ் லிசா