”சரத் பாபுவின் சிரிக்காத முகத்தை இன்று தான் நான் பார்க்கிறேன்” என சரத்பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் சரத்பாபு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை சார்பில் தகவல் வெளியானது. சரத்பாபுவின் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியவை அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்திருந்தனர். அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் நடிகர் சரத்பாபுவின் உடல் நேற்று ஹைதராபாத் ஃபிலிம் சேம்பரில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இரவு அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தெலுங்கு திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து நேற்று இரவே ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு சாலை வழியாக கொண்டு அவரது உடல் கொண்டு வரப்பட்டு சென்னை தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திரைப் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் பார்த்திபன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது…
” நண்பர் சரத் பாபுவின் சிரிக்காத முகத்தை இன்று தான் நான் பார்க்கிறேன். நான் அவரை சந்திக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருப்பார். செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்ற பாட்டு இவருடைய புன்னகையை பார்த்துத்தான் எடுத்து இருப்பார்களோ என்று சொல்லும் அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கக் கூடியவர்.
அவர் அவருடைய உடலை எவ்வளவு கவனித்த போதிலும் இப்படிப்பட்ட மரணம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. சில யூடியூப் சேனல் மூலமாக போன மாதமே அவர் இறந்ததாக செய்தி வெளியிட்டு அவரை கொன்று விட்டன. அது போன்ற செய்திகள் மிகவும் வருந்தத்தக்கது. உடனே அவர் வீட்டில் இருந்து அதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுபோன்ற செய்திகளை தவிர்க்க வேண்டும்.
ஒரு சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்தவர். எல்லோராலும் மதிக்கப்படுகிறவர்.
அவருடைய ஆன்மா சாந்தி அடைய வேண்டும்..” என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.







