2023-24ம் ஆண்டு கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு நிறைவு! 760 இடங்களுக்கு 22,525 பேர் விண்ணப்பிப்பு!

2023-24ம் ஆண்டு கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவுபெற்றது. மொத்தமுள்ள 760 இடங்களுக்கு 22,525 பேர் விண்ணப்பித்துள்ளனர். 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஜூன் 12 ஆம் தேதி முதல்…

2023-24ம் ஆண்டு கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவுபெற்றது. மொத்தமுள்ள 760 இடங்களுக்கு 22,525 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஜூன் 12 ஆம் தேதி முதல் கால்நடை மருத்துவ படிப்புக்களுக்காக ஆன்லைன் மூலம் மாணவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி# வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு (பிவிஎஸ்சி – ஏஹெச்) படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. எஞ்சிய 597 இடங்கள் தமிழகத்துக்கு உள்ளன.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பில் 45 இடங்கள், உணவு தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள், பால்வள தொழில்நுட்ப படிப்பில் 2 இடங்கள், கோழியின தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

இந்நிலையில், பிவிஎஸ்சி – ஏஹெச், பி.டெக். படிப்புகளுக்கு 2023-24-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் கடந்த ஜூன் 12-ம் தேதி காலை 10 மணி முதல் இன்று மாலை (30.06.2023) 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் மொத்தமுள்ள 760 இடங்களுக்கு 22,525 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 30% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.