இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்று ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், ஆளுநரின் அதிகாரம் உட்பட பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். அமைச்சரவையில் யார் இருக்க வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமைச்சரவை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், முதலமைச்சரின் தனி அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும், தம்முடைய அமைச்சரவையில் யாரையும் நீக்குவதற்கு தங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரை நீக்குவது தொடர்பான தங்களது கடிதம் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தம்முடைய ஆலோசனையின்றி தாங்கள் எழுதிய கடிதம் செல்லத்தக்கது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை நடத்த அனுமதி கோரியதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது, தங்களின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதோடு உண்மையான எண்ணத்தையும் வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை கோரியபோது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், விசாரணையில் உள்ள நபரை தகுதி நீக்கம் செய்ய சட்டத்தில் இடமில்லை என்ற சட்டவிதியை மேற்கோள் காட்டியுள்ளார்.
இதையும் படியுங்கள் : ஜூலை 2ம் தேதி வெளியாகிறது ’மாவீரன்’ ட்ரெய்லர் – ரசிகர்கள் குஷி!!
சட்ட ஆலோசனை கூட பெறாமல் அவசர கதியில் முடிவெடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்ட ஆலோசனை பெற மத்திய அரசு சுட்டிக்காட்டும் அளவுக்கு, அரசியல் சாசனத்தின் மீது தங்களுக்கு மரியாதை இல்லை என தெரிவித்துள்ளார்.
மரியாதைக் குறைவான சொற்களை பயன்படுத்தியதாக ஆளுநர் குறிப்பிட்டதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர், தமிழ் கலாச்சாரத்தின்படி தங்கள் மீது உரிய மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன் என்றும், அரசியல் சாசனத்திற்கு விரோதமான தங்களின் உத்தரவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.