சென்னையில் கடைகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வகையில் இரண்டு குப்பை தொட்டிகளை விரைந்து வைக்க வேண்டும் என்றும் மீறினால் அபராதம் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தமாக 85,477 கடைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து கடைகளிலும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்க இரண்டு குப்பை தொட்டிகள் வைத்திருப்பது கட்டாயம்.
சென்னை மாநகராட்சி சார்பில் இது நாள் வரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 43,835 கடைகளில் இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. கள ஆய்வில் இரண்டு குப்பை தொட்டிகள் வைக்காத கடையின் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சியின் சார்பில் 1.04 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வகையில் இரண்டு
குப்பைத் தொட்டிகளை வைக்காத கடையின் உரிமையாளர்களுக்கும், நடைபாதை மற்றும் சாலைகளில் குப்பைகளை கொட்டும் கடையின் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துறையில் துணை விதிகள் 2019 இன் படி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







