சென்னையில் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்!

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் (எஸ்.ஐ.ஆர்.) கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 14 ஆம் தேதி விண்ணப்பங்கள் பெறுவதற்கான பணிகள் நிறைவடந்தன. இந்த நிலையில் நேற்று தமிழ்நாட்டில் மாவட்டம் வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

எனினும், இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள், தங்களுடைய பெயரை சேர்க்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் சேர்க்கை, திருத்தம் மற்றும் மறுப்பு தொடர்பான பணிகளை ஜனவரி மாதம் 18-ம் தேதி வரை மேற்கொள்ளலாம். பெயர் இல்லாதவர்கள், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, இனி அதற்கான உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். இந்த உறுதிமொழி படிவம் என்பது, சிறப்பு தீவிர பணிக்காக கொடுக்கப்பட்ட கணக்கெடுப்பு படிவம் போன்று தான் இருக்கும். அதில் கடந்த 2002 மற்றும் 2005-ம் பட்டியலில் இடம் பெற்ற தங்களது பெயர் அல்லது பெற்றோர்கள் விவரங்களை பூர்த்தி செய்துதர வேண்டும். மேலும் இந்த படிவம் 6ஐ வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேரடியாக பெறலாம்.

மேலும், சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலரிடமும் சமர்ப்பிக்கலாம். மேலும் https://voters.cci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், தங்களுடைய பெயர் சேர்த்தல் நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும், நாளையும் (டிச.20,21) சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.