“இளைஞர்களே போராட்டத்தைத் தொடருங்கள், மோடி ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோம்” – ராகுல் காந்தி

ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி போராடிவரும் இளைஞர்களுக்கு எப்போது துணை நிற்போம் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

SIR விவகாரத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெறும் என சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே அழைப்பு விடுத்திருந்தனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி வந்த அபிஜித் தீப்கே, பினராயி விஜயன், எம்.ஏ.பேபி, மம்தா பானர்ஜி, அறவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது, “கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நான் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்புக்கு எதிராகப் போராடி வருகிறேன். ஒரு எதிராளியை எப்படிக் கூர்ந்து கவனித்து முழுமையாகப் புரிந்துகொள்ள முடியுமோ, அப்படி அவர்களை எனக்கு அத்துபடி.

இவர்களின் அடிப்படைப் பண்பே கோழைத்தனம் தான்.

இந்தக் கதையின் வில்லன்களான நரேந்திர மோடி, அமித் ஷா, மோகன் பகவத், ஞானேஷ் குமார் மற்றும் அஜித் தோவல் ஆகியோரைச் சுற்றியுள்ள களம் மெல்ல மெல்லச் சுருங்கிக்கொண்டிருக்கிறது. நாம்தான் அந்தக் களத்தைச் சுருக்கிக்கொண்டிருக்கிறோம்.

திரு. மோடி அவர்களே, நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். காவல்துறையினரை எவ்வளவு வேண்டுமானாலும் வரவழையுங்கள் – 10,000, 20,000, 50,000 என எவ்வளவு பேரையும் களமிறக்குங்கள்.

தலைவர்கள் அனைவரையும் கைது செய்யுங்கள். இளைஞர்கள் அனைவரையும் கைது செய்யுங்கள். எங்கள் அனைவரையும் கைது செய்யுங்கள்.

நாங்கள் உங்களைச் சூழ்ந்துகொண்டிருக்கிறோம்; ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. என் வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்: எங்களுக்குத் தேவையான தகவல்கள் ஏற்கனவே எங்களிடம் உள்ளன.

நாங்கள் எங்கள் அரசியலமைப்பைக் காப்போம். இந்திய மக்களின் குரலைப் பாதுகாப்போம். கடந்த 10-15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் இனி ஒருபோதும் நடக்காது என்பதை உறுதி செய்வோம்.

இந்திய இளைஞர்களே, உங்களைப் பார்த்து நான் பெருமை கொள்கிறேன். போராட்டத்தைத் தொடருங்கள். நாங்கள் உங்களுடன் துணை நிற்கிறோம்.

இந்த ஆட்சியையும், நமது அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்தியவர்களையும் தோற்கடிப்பதை நாங்கள் உறுதி செய்வோம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.