“முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும்!” – வானதி ஸ்ரீநிவாசன்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தீபம் ஏற்றப்படாததற்கு முதலமைச்சர் விஜய்தான் காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ள வானதி சீனிவாசன், உச்ச நீதிமன்றத்தை அவமானப்படுத்திய முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தீபத் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதையடுத்து தீபத் தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மலை அடிவாரத்தில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். திருப்பரங்குன்றம் மலைப் பாதையில் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

தமிழக பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி ஸ்ரீநிவாசன் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“உச்ச நீதிமன்றத்தை அவமானப்படுத்திய முதலமைச்சர் விஜய் பதவி விலக வேண்டும். சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கடந்த ஆண்டு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றாமல் அன்றைய திமுக அரசு அடக்குமுறைகளை ஏவியது. இந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், தீபத் தூணில் தீபம் ஏற்றாமல், விஜய் அரசு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. திமுக அரசு பின்பற்றிய அதே இந்து விரோதப் போக்கை, விஜய் அரசும் செய்திருக்கிறது.

முதலமைச்சர் விஜய் இந்து கோயில்களுக்கு சென்று வழிபட்டது எல்லாம், இந்துக்களை ஏமாற்ற நடத்தப்பட்ட நாடகம் என்பது, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், தீபத் தூணில் தீபம் ஏற்றாததன் மூலம் உறுதியாகியுள்ளது. மாற்று மதத்தை சேர்ந்தவரான விஜய், பெரும்பான்மை இந்துக்களின் உணர்வுகளை அவமானப்படுத்தியுள்ளார்.

தவெகவும் இந்து விரோதப் போக்கை பின்பற்றுவதாக குற்றச்சாட்டு!

மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதத்தை, இந்து கடவுள்களை, இந்து சம்பிரதாயங்களை மட்டும் எதிர்க்கும் கட்சிகளின் வரிசையில் தவெகவும் சேர்ந்திருக்கிறது. இந்துக்களுக்கு ஆதரவானது என்றால், உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டாலும் கேட்க மாட்டோம் என்பதை முதலமைச்சர் விஜய் செயலில் காட்டியிருக்கிறார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்படுத்தாதற்கு முதலமைச்சர் விஜயின் உத்தரவே காரணம்.

முதல்வர் பதவி விலக வேண்டும்!

உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாமல், இந்துக்களை மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தையும் அவமானப்படுத்திய முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும். அதற்கான காலம் விரைவில் வரும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.