SIR விவகாரத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி டெல்லியில் மாணவர் அமைப்பினர், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் , ஆம் ஆத்மி உள்ளிட்டோர் போராடி வருகின்றனர். இந்த நிலையில் கரப்பான் பூச்சி கட்சி சார்பில் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெறும் என சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே அழைப்பு விடுத்திருந்தனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி வந்த அபிஜித் தீப்கே, பினராயி விஜயன், எம்.ஏ.பேபி, மம்தா பானர்ஜி, அறவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் திமுக தலைவரும் முன்னாள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “அறிவிக்கப்படாத அவசரநிலை: ஜனநாயகத்தைக் காப்பவர்கள் சிறைபிடிக்கப்படுகிறார்கள்; ஆனால் அதற்குத் துரோகம் இழைப்பவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்!
மக்களின் வாக்குரிமையைக் காக்கப் போராடும் முன்னாள் முதலமைச்சர்கள் பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி மற்றும் தோழர் மணிக் சர்க்கார், சிபிஐஎம் (CPIM) பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோரை மத்திய பாஜக அரசு சிறைபிடித்துள்ளது. அதேவேளையில், தேசத்துரோகச் செயலுக்காக விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார், ‘Z+’ பாதுகாப்புடன் சுதந்திரமாக வலம் வருகிறார்!
எவ்வளவு பெரிய அவமானம்!
SIR-க்கு (தேர்தல் ஆணையர் நியமனச் சட்டம்) பின்னாலுள்ள சதித்திட்டம் முழுமையாக அம்பலமாகிவிட்டது; இனி அதை மறைக்க முடியாது! டெல்லியில் தடுப்புகளை அமைப்பதோ, இணைய சேவையை முடக்குவதோ அல்லது அரசியல் தலைவர்களைச் சிறைபிடிப்பதோ இந்திய இளைஞர்களின் எழுச்சியை ஒடுக்க முடியாது. ஒரு முழு தேசத்தையும் மத்திய அரசு எவ்வளவு காலத்திற்கு முற்றுகையிட்ட நிலையில் வைத்திருக்க முடியும்?
இதற்கிடையில், தமிழ்நாட்டில் உள்ள தகுதியற்ற TVK அரசு, SIR-க்கு எதிராகவும் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தியும் போராடும் TNCPIM செயலாளர் சண்முகம் மற்றும் பிற செயல்பாட்டாளர்களைச் சிறைபிடித்து, டெல்லியில் உள்ள தனது எஜமானர்களைத் திருப்திப்படுத்தத் தீவிரமாக முயன்று வருகிறது.
சிறைபிடிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். ஞானேஷ் குமார் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், SIR நடைமுறை நிறுத்தப்பட வேண்டும், மேலும் இந்திய மக்களுக்குத் துரோகம் இழைத்ததற்குப் பொறுப்பான அனைவரும் பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும்!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




