“உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டது!” – மாணிக்கம் தாகூர்!

திருப்பரங்குன்றம் கார்த்திகை மகாதீபம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் தெளிவாக உள்ளதாகவும், கோயில் நிர்வாகத்தின் பாரம்பரிய நடைமுறைகளின்படி உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் இன்று (நவம்பர் 24) மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் கார்த்திகை மகாதீபம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் தெளிவாக உள்ளன என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

தீபம் ஏற்றும் குழுவை கோயில் நிர்வாகமே நியமிக்க வேண்டும்!

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, தீபம் ஏற்றும் பணியை தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் கொண்ட குழு மட்டுமே மேற்கொள்ள வேண்டும். அந்தக் குழுவில் இடம்பெற வேண்டிய நபர்களின் எண்ணிக்கை மற்றும் குழுவின் அமைப்பு ஆகியவற்றை மதுரை மாவட்ட ஆட்சியர், கோயில் செயல் அலுவலர், இந்திய தொல்லியல் துறை மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோருடன் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்.

மேலும், இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்கான பொறுப்பு மதுரை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதுடன், மலைக்குச் செல்லும் வழியில் மக்களின் அணுகலை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு காவல் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய முறைப்படி தீபம் ஏற்றப்பட்டது!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேவஸ்தானம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பிலும், கோயிலின் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகள், பழக்கவழக்கங்கள், சடங்குகள் மற்றும் ஆகம மரபுகளின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே அமைந்துள்ள தீப மண்டபத்தில்தான் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுவது வழக்கம் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க, இன்று (நவம்பர் 24) மாலை 6 மணிக்கு கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது.

மத மரபுகளும் நீதிமன்ற உத்தரவுகளும் மதிக்கப்பட வேண்டும்!

நமது தொன்மையான மரபுகள், மத நடைமுறைகள் மற்றும் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் ஆகியவை அமைதியான முறையில் மதிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட வேண்டும். கார்த்திகை தீபத்தின் ஒளி திருப்பரங்குன்றத்தை ஒளிரச் செய்து, தமிழ்நாட்டில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும். இவ்வாறு மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.