மரபையும் மக்கள் ஒற்றுமையையும் பாதுகாத்த தவெக அரசுக்கு சிபிஐஎம் பாராட்டு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள கல்தூண் மண்டபத்தில் வழக்கம்போல் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதை வரவேற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மத நல்லிணக்கத்தையும் மக்கள் ஒற்றுமையையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுத்த தவெக அரசுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளது.

சிபிஐஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“மரபையும், மக்கள் ஒற்றுமையையும் பாதுகாத்த த.வெ.க அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு. திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாக ஏற்றப்பட்டு வந்த உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் உள்ள கல்தூண் மண்டபத்தில் திருக்கார்த்திகை தீபம் இந்த ஆண்டும் வழமைபோல் ஏற்றப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. உண்மையான பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மரபுகளையும், பாரம்பரியத்தையும் பின்பற்றும் வகையிலும், பல்வேறு முனைகளிலிருந்து கொடுக்கப்பட்ட கடும் அழுத்தங்களுக்கும் நிர்ப்பந்தங்களுக்கும் அடிபணியாமல் மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில் த.வெ.க அரசு எடுத்த உறுதியான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது.

சங்பரிவாரத்தின் ஆத்திரமூட்டலுக்கு மக்கள் இரையாகவில்லை!

சங்பரிவாரத்தின் ஆத்திரமூட்டலுக்கும் திசைதிருப்பல்களுக்கும் இரையாகாமல் வழக்கம்போல் மக்கள் திருக்கார்த்திகை விழாவை கொண்டாடியுள்ளனர். கடந்த ஆண்டு திருக்கார்த்திகை விழாவின் போது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்திய உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த ஆண்டும் அதேபாணியில் தேவையில்லாமல் இப்பிரச்சனையில் தலையிட்டது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. இது வரம்புமீறி உள்நோக்கத்துடன் செயல்படும் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகமாகும்.

மதவெறி சக்திகளின் சதிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை!

மதவெறி சக்திகளின் சதி செயல்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பது மீண்டும் ஒருமுறை அழுத்தமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.