திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தவெக அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழர் மரபையும் மத நல்லிணக்கத்தையும் பாதுகாத்ததாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு திருமாவளவன், சு. வெங்கடேசன், மு. தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் மத நல்லிணக்கமும் சமூக ஒற்றுமையும் பாதுகாக்கப்பட்டுள்ளதாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

திருமாவளவன் பாராட்டு!

விசிக நிறுவனத் தலைவர் திருமாவளவன் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோவிலருகே உள்ள தீபமண்டபத்தில் மகாதீபத்தை ஏற்றியுள்ள மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகள்.

சங்பரிவார்களின் சதிமுயற்சியை முறியடித்து தமிழ்நாட்டில் சமூகநல்லிணக்கத்தைப் பாதுகாத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுகள். எத்தனை நெருக்கடிகளைத் தாண்டி இதனை சாதித்திருக்கமுடியும் என்பதை சங்பரிவார்களின் ‘வலைபின்னல் அரசியல்’ வலிமையை அறிந்தவர்களால் உணரமுடியும்.

ஆட்சிக்கு எத்தகைய நெருக்கடி வந்தாலும், தமிழர் மரபையும் சமூகநல்லிணக்கத்தையும் பாதுகாப்பதில் உறுதியோடு செயலாற்றியுள்ள தவெக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உளமார்ந்த பாராட்டுகள்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மத நல்லிணக்கத்தை நிலைநிறுத்திய தவெக அரசு: சு. வெங்கடேசன்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு. வெங்கடேசன் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் சிரசின் மேல் அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகாமை கல் தூண் மண்டபத்தில் திருக்கார்த்திகை தீபம் சுடர்வீசுகிறது.

திருப்பரங்குன்றம் கோவிலின் வழக்கத்தையும், மரபுகளையும், ஆகமங்களையும் சேர்த்து தமிழ் நாட்டின் மத நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்திய த.வெ.க. அரசுக்குப் பாராட்டுகள். வழக்கம்போல இந்த ஆண்டும் ஒற்றுமைச் சுடரை ஒளிரவிட்ட மதுரை மக்களுக்கு நன்றி! பக்தர்கள் அனைவருக்கும் திருக்கார்த்திகை திருநாள் வாழ்த்துகள்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கு மு. தமிமுன் அன்சாரி பாராட்டு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி MLA இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரை திருப்பரங்குன்றம் மலையில் வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மலையில் தீபம் ஏற்றி வரலாற்று மரபை தமிழ்நாடு அரசு காப்பாற்றி இருக்கிறது. எத்தனையோ பல நெருக்கடிகள் இருந்த நிலையிலும்; தமிழ்நாட்டு மக்களுடைய மன உணர்வுகளை புரிந்து கொண்டு; பக்தர்களின் பாரம்பரிய பண்பாட்டை காப்பாற்றியதற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நடைமுறைகள் தொடர வேண்டும் என்று தொடர்ந்து மதுரை மண்ணில் குரல் கொடுத்து; அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றுபடுத்தி; ஜனநாயக வழியிலான செயல்பாடுகளை முன்னெடுத்த மதுரை மத நல்லிணக்க கூட்டமைப்பிற்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஆண்டு திராவிட முன்னேற்ற கழக அரசு ஆட்சியில் இருந்தபோது, தமிழ்நாட்டின் ஒற்றுமை மற்றும் மக்களின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு இதே போன்று உறுதியான முடிவுகளை எடுத்தது.

அப்போது ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் அதனை வெகுவாக வரவேற்றார்கள். இப்போது இந்த தவெக அரசும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது வரவேற்கத்தக்கது. தற்போது அண்ணா திமுக பொதுச செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இதை கண்டித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 2014-ஆம் ஆண்டில் இவ்விவகாரத்தில் இதே போன்ற ஒரு சிக்கல் வந்தபோது; அன்றைய அதிமுக அரசின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவும் இதே நிலைப்பாட்டில் தான் இருந்தார் என்பதை மறந்துவிட்டு அவர் கருத்து கூறியுள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை கட்டி காக்கும் வகையில்; இவ்விஷயத்தில் தொடர்ந்து ஒரே நிலைப்பாட்டில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். அதுபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும்; பல்வேறு சமூகங்களை சேர்ந்த அமைப்புகள் மற்றும் அதன் தலைவர்கள்; மனிதநேய – மனித உரிமை செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதில் யாருக்கு வெற்றி ?யாருக்கு தோல்வி ?என்ற விவாதம் தேவையில்லை. மாறாக அமைதியும் மக்களின் ஒற்றுமையும் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்ற நிம்மதி தான் உயர்ந்து நிற்கிறது! தமிழ்நாட்டின் அமைதி, மத நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றை பாதுகாக்க உறுதி ஏற்போம்! அனைத்து சாதி, மத மக்களும் நிம்மதியாக வாழும் பூமி தமிழ்நாடு என்பதை தொடர்ந்து நிரூபிப்போம்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.