5வது உலகக் கோப்பை வளையப்பந்து போட்டியில், இந்திய அணிக்காக விளையாடி சாதனைப் படைத்து, சொந்த ஊருக்கு திரும்பிய வீராங்கனைகளுக்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டினர்.
சர்வதேச வளையப்பந்து கூட்டமைப்பு மற்றும் தென்னாப்பிரிக்கா வளையப்பந்து வாரியம் இணைந்து நடத்திய, 5வது உலகக் கோப்பை வளையப்பந்து போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் உள்ள பிரிட்டோரியா மாகாணத்தில் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், இந்திய வளையப்பந்து அணியின் மூத்தோர் அணியானது ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளிலும், 23 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியானது ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளிலும் கலந்து கொண்டது.
இதில், இந்திய மூத்தோர் வளையப்பந்து அணியில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த ரம்யா, சிவானி, அம்பிகா ஆகியோர் கலந்துகொண்டு விளையாடினர். 23 வயதுக்கு உட்பட்ட இந்திய வளையப்பந்து அணியில் ராசிபுரத்தை சேர்ந்த தக்ஷிதா கலந்து கொண்டார். இதில், இந்திய வளையப்பந்து அணி தங்கப்பதக்கமும், இந்திய மூத்தோர் அணி வெண்கலப் பதக்கமும் வென்றது.
இந்நிலையில், ரம்யா, ஷிவானி, அம்பிகா, தக்ஷிதா ஆகியோர், சொந்த ஊரான ராசிபுரத்திற்கு வந்தனர். அவர்களை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள், நாமக்கல் மாவட்ட வளையப் பந்து நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்து தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.







