’பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் தனி இடம் பிடிக்கும்”- இயக்குநர் சுதா கொங்கரா ஓபன் டாக்….!

’பராசக்தி’ திரைப்படமானது தமிழ் சினிமாவிலும் ரசிகர்களின் மனதிலும் நிச்சயம் தனி இடம் பிடிக்கும்” என்று இயக்குநர் சுதா கொங்கரா கூறியுள்ளார்.

இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. இறுதிச்சுற்று, சூரரைப்போற்று என தனது அழுத்தமான கதைகள் மூலம் தமிழ் சினிமாவில் குறிப்படத்தக்க இடத்தை அவர் பிடித்துள்ளார். இந்த நிலையில் அவரது புதிய திரைப்படமான ‘பராசக்தி’அறிவிக்கப்பட்டதில் இருந்தே வர்த்தக வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பராசக்தி படம் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பகிர்ந்து கொண்டதாவது, “’பராசக்தி’ கதை நான் எழுதிய பின்பு பாராட்டுகளை பெற்ற அதேசமயம் கதையை சுற்றி பல சந்தேகங்களும் எழுந்தது. திரைக்கதை உருவாக்கமே கடினமாக இருந்தது. இந்தக் கதையை படமாக்குவது மிகவும் சவாலானதும் என்றும் படம் வெளியானதும் பல விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்றும், பலர் எச்சரித்தனர். இருப்பினும், மணிரத்னம் சார் பின்பற்றும் ‘சாத்தியமற்றதை சாத்தியமாக்க வேண்டும்’ என்பதின் அடிப்படையில் பல சவால்களை தாண்டி இதை படமாக்கினேன்.

படம் உருவாக்கத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சாருக்கு நன்றி. அவரது ஆதரவு இல்லாமல் ’பராசக்தி’ இல்லை. இந்தப் படத்தின் முதுகெலும்பு நடிகர் சிவகார்த்திகேயன். அவரது அர்ப்பணிப்பும், கதாபாத்திரத்திற்காக அவர் கொடுத்திருக்கும் உழைப்பும் நிச்சயம் பார்வையாளர்கள் மத்தியில் பேசப்படும்.

ரவி மோகனின் திரை ஆளுமை ‘பராசக்தி’ படத்தின் அசைக்க முடியாத பெரும்பலம். இந்தப் படத்தில் நடிக்கவேண்டும் என அவர் முடிவெடுத்ததற்கு நன்றி. திரைக்கதை எழுதும் போதே அதர்வா முரளியின் கதாபாத்திரம் என்னை உற்சாகப்படுத்தியது. அதர்வாவின் அர்ப்பணிப்பால் நான் எதிர்பார்த்ததைவிட திரையில் அவர் கதாபாத்திரம் இன்னும் நன்றாக வந்துள்ளது. நடிகை ஸ்ரீலீலாவை இந்தப் படத்தில் முற்றிலும் வேறொரு கோணத்தில் பார்ப்பீர்கள். அற்புதமான நடிப்பால் தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். எனது படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை பெரும் பலம். ’பராசக்தி’ படத்தில் அவரது இசையை நிச்சயம் ரசிப்பீர்கள். ’பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவிலும் ரசிகர்களின் மனதிலும் நிச்சயம் தனியிடம் பிடிக்கும்” என்றார்.

இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்திய வரலாற்றின் முக்கியமான ஒரு காலகட்டத்தை மறுஉருவாக்கும் செய்திருக்கும் ‘பராசக்தி’திரைப்படம் ஜனவரி 10, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.