ஜன நாயகனின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் – நாளை காலை தீர்ப்பு வழங்கும் சென்னை உயர்நீதிமன்றம்…!

நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் தொடர்பான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் நாளை வழங்குகிறது.

கோட் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’ஜன நாயகன்’. ஹெச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பாபிதியோல், நரேன், மமிதா பைஜு, பிரியா மணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு இப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தணிக்கை விவகாரம் தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

நேற்று விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் தணிக்கை வாரியம் தரப்பில், ‘ஜன நாயகன்’ படத்துக்கு எதிராக தணிக்கைக் குழு உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில்தான் மறுஆய்வுக் குழுவுக்கு இந்தப் படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது.

படத் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில்  ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரைத்த, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தீர்ப்பை தேதி குறிக்காமல் ஒத்தி வைத்த நிலையில், ஜன நாயகன் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை நாளை காலை 10.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்குகிறது.

பொங்கலை முன்னிட்டு இப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைகாததால் படத்தின் வெளியீட்டுத் தேதியை ஒத்திவைப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.