மகளிர் இடஒதுக்கீடு: “தடைகளை நீக்குவோம்!” – பிரதமர் மோடி உறுதி!

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதற்கான அனைத்து தடைகளையும் நீக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

மகளிர் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பவர்கள் வெற்றி பெற முடியாது!

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் தனது அரசு உறுதியாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை மீண்டும் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையை எதிர்க்கும் கட்சிகள் வெற்றி பெற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்களவைத் தொகுதிகளை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் 50% அதிகரிப்பது, தொகுதி மறுவரையறைக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது ஆகியவற்றை முன்மொழியும் இரண்டு மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதன் பின்னணியில் பிரதமர் மோடியின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.

எக்ஸ் தளத்தில் பழைய வீடியோவைப் பகிர்ந்த மோடி!

எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு வழிவகுக்கும் அனைத்து தடைகளையும் நீக்குவதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இதனுடன், பெண்களின் பங்கேற்பை உறுதி செய்வதற்கான போராட்டம் பல தசாப்தங்களாக நடைபெற்று வருவதாக அவர் பேசிய பழைய வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

“பெண்களின் பங்கேற்பை உறுதி செய்வதற்கான போராட்டம் பல தசாப்தங்களாக நடைபெற்று வருகிறது. இந்த முயற்சியில் நானும் ஒருவராக இருந்து வருகிறேன். பெண்கள் தொடர்ந்து இந்தப் பிரச்சினையை என்னிடம் எழுப்பி வந்துள்ளனர். பல சகோதரிகள் தங்களது கவலைகளையும் என்னிடம் பகிர்ந்துள்ளனர்.”

பெண்களின் ஆதரவு பாஜக அரசுக்கு உள்ளது: மோடி!

நாட்டிலுள்ள அனைத்துப் பெண்களின் ஆதரவும் பாஜக அரசுக்கு இருப்பதாக பிரதமர் வலியுறுத்தியுள்ளார். மகளிர் இடஒதுக்கீட்டுக்கு வழிவகுக்கும் பாதையில் உள்ள அனைத்து தடைகளையும் மத்திய அரசு நீக்கும் என்றும் உறுதியளித்துள்ளார். மேலும், “Humara hausla bhi buland hai, humari himmat bhi atoot hai aur humara iraada bhi adig hai. (எங்களது மனஉறுதி உயர்வாக உள்ளது, எங்களது துணிச்சல் உடைக்க முடியாதது, எங்களது தீர்மானம் உறுதியானது)” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.