“அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை!” – தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

திருவாரூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவரின் மரணத்துக்கு மருத்துவர்கள் இல்லாததே காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

மாணவர் உயிரிழப்பு: டிடிவி தினகரன் இரங்கல்!

“திருவாரூர் மாவட்டம், வடுவூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரும், கபாடி வீரருமான திரு. விக்னேஷ்வரன் அவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த மாணவரை வடுவூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது, அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததே அவரது உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனைகள் குறித்து கடும் விமர்சனம்!

தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு, மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு ஆகியவை குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசால், மக்களின் உயிரைக் காக்க வேண்டிய பொறுப்புமிக்க அரசு மருத்துவமனைகள் மரணக் கூடங்களாக மாறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மருத்துவத்துறை அமைச்சருக்கு கண்டனம்!

ஏழை, எளிய, விளிம்புநிலை மக்கள் நாடி வரும் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதைவிட மதுபானக் கூடங்களை மேம்படுத்துவதுதான் முக்கியம் என்பதில் உறுதியாக இருந்து, வெற்று விளக்கங்களை அளித்துக் கொண்டிருக்கும் மருத்துவத்துறை அமைச்சரின் அலட்சியத்தால் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகுமோ என்ற அச்சம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க வலியுறுத்தல்!

எனவே, மருத்துவத் துறையின் அலட்சியத்தால் உயிரிழந்ததாகக் கூறப்படும் மாணவரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, வடுவூர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் வரை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவத் துறையையும் தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.