“தொலைநோக்குப் பார்வையுடன் தொகுதி மறுவரையறை பிரச்சினையை அணுகியுள்ளோம்” – மு.க.ஸ்டாலின்

உணர்ச்சிவசப்படாமல், தொலைநோக்குப் பார்வையுடன் தொகுதி மறுவரையறை பிரச்சினையை நாம் அணுகியுள்ளோம் என திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

டெல்லியில் நவம்பர் 30ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இதில் தொகுதி மறுவரையறை தொடர்பான திருத்தப்பட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவுக்கு நேற்று அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுகவின் செயல்பாடுகள் குறித்தும், தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிப்பதாக திமுக எம்.பி ஆ.ராசா அறிவித்தார்.

இக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

“உணர்ச்சிவசப்படாமல், தொலைநோக்குப் பார்வையுடன் தொகுதி மறுவரையறை பிரச்சினையை நாம் அணுகியுள்ளோம். தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் கொண்டுவரப்படும்போது திமுக என்ன நிலைப்பாடு எடுக்கும் என்றுதான் கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் பேசப்பட்டு வந்தது. அதற்கான தெளிவான பதிலை நேற்று நாம் கொடுத்துள்ளோம்.

தொகுதி மறுவரையறை என்ற ஓர் ஆபத்து வரவுள்ளது. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறையும் என இந்தியாவிலேயே முதன்முதலாக எச்சரிக்கை மணி அடித்தது நாம்தான். இது பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தினோம். இந்திய அளவில் தலைவர்களை அழைத்துக் கூட்டம் நடத்தினோம். கடந்த ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் காலத்தில், நம்மில் யாரையும் கலந்தாலோசிக்காமல், ஒருதலைப்பட்சமாக, எந்த உறுதியும் அளிக்காமல் ஒரு மர்ம மசோதாவைக் கொண்டுவந்தார்கள். அதைப் படித்துப் பார்க்கக்கூட உரிய கால அவகாசம் தராமல் அவசரமாகக் கொண்டுவந்த அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தோற்கடித்தோம்.

பாஜகவுக்குக் கடும் அழுத்தத்தைக் கொடுத்தோம். தற்போது இருக்கும் தொகுதி எண்ணிக்கையே தொடரலாம் என நாம் விரும்பினாலும், தவிர்க்க முடியாத அரசியலமைப்புச் சட்ட விதிப்படி தொகுதிகளை அதிகரிக்கும்போது, அதில் தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது என்பதற்கான நடைமுறைக்கு ஏற்ற தீர்வை (Practical) 2024ஆம் ஆண்டே நாம் சட்டமன்றத் தீர்மானம் மூலமாக முன்வைத்தோம். நாம் மட்டும் குரல் எழுப்பாமல் இருந்திருந்தால், மக்கள் தொகை அடிப்படையில் வட மாநிலங்களுக்கு மட்டும் தொகுதிகளை அதிகரித்துவிட்டு, நமக்கான சதவீதத்தைக் குறைத்திருப்பார்கள். ஆனால், இன்றைக்கு மசோதாவின் நகல் கிடைத்துவிட்டது. அதில் நாம் முன்வைத்த இரண்டு முக்கியமான கோரிக்கைகளுமே இடம்பெற்றுள்ளன. இது நம்முடைய மூன்றாண்டுகாலத் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி.

தற்போது மட்டும் நாம் இந்த முடிவை எடுக்கவில்லை என்றால், 1971ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடைபெறுவதற்குப் பதிலாக, கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி எண்ணிக்கையை மாற்றி அமைத்துவிடுவார்கள். அது தமிழ்நாட்டிற்குப் பேராபத்தாகிவிடும். அதை நாம் தடுத்துவிட்டோம். நாம் எதிர்பார்த்த மாதிரியே இந்த மசோதா வந்துள்ளது. நம்மைப் பொறுத்தவரை, நாம் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளிலும் தற்போது வரை உறுதியாக உள்ளோம். தமிழ்நாட்டின் நலன் பறிபோகக் கூடாது. அதில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்.

அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றுவதில் நம் முயற்சியில் வெற்றி அடைந்துள்ளோம். 1976ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறையின்போது 42 ஆக இருந்த தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளை 39 ஆகக் குறைத்தார்கள். ஆனால், தற்போது நம்முடைய சதவீதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், நமக்கான தொகுதிகள் உயர்வதை உறுதி செய்துள்ளோம். நம்முடைய கடமையை நாம் செய்துள்ளோம். இதை எல்லோரிடமும் எடுத்துச் சொல்லுங்கள். நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நம் நிலைப்பாட்டை ஓங்கிச் சொல்லுங்கள். கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படையாகச் சொல்வதில் தயக்கம் கூடாது.

எப்போது வாள் எடுக்க வேண்டும், எப்போது கேடயம் எடுக்க வேண்டும் என்பதைச் சரியாகத் தீர்மானிக்க வேண்டும் எனத் தலைவர் கலைஞர் சொல்லியிருக்கிறார். அதன்படி நடந்துகொள்ளுங்கள்” என்று அவர் பேசினார்.

திமுக எம்.பி.க்கள் அனைவரும் நாளை டெல்லி செல்ல உத்தரவு

மேலும், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஆகியவை குறித்து மட்டுமே எம்.பி.க்கள் பேச வேண்டும் என்றும், திமுகவின் நிலைப்பாட்டை வெளிப்படையாகவும் அழுத்தமாகவும் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எந்தவொரு கட்சியையும் பாராட்டியோ அல்லது விமர்சித்தோ பேசக்கூடாது என்றும் திமுக எம்.பி.க்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.