ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த WWE மல்யுத்த வீரர் பிரான்சன் ரீட் (Bronson Reed), 38 வயதில் மருத்துவச் சிக்கல்கள் காரணமாக உயிரிழந்ததாக WWE நிறுவனம் தெரிவித்துள்ளது. அவரது மறைவுக்கு ஜான் சீனா, ரிக் ஃப்ளேர் உள்ளிட்ட முன்னணி மல்யுத்த வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரான்சன் ரீடின் மறைவு செய்தியை WWE நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியது. இதையடுத்து, மல்யுத்த உலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜான் சீனா, ரிக் ஃப்ளேர் இரங்கல்
17 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஜான் சீனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரான்சன் ரீடின் நினைவுப் படத்தைப் பகிர்ந்து அஞ்சலி செலுத்தினார். அதில், “WWE remembers Jermaine Haley ‘Bronson Reed’ 1988-2026” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்ற முன்னாள் வீரர் ரிக் ஃப்ளேர், பிரான்சன் ரீட் மிக விரைவாக நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டதாகவும், மல்யுத்த உலகின் மதிப்புமிக்க உறுப்பினராக அவர் திகழ்ந்ததாகவும் இரங்கல் தெரிவித்தார்.
முன்னாள் WWE மகளிர் சாம்பியன் ரியா ரிப்லி, சக ஆஸ்திரேலிய வீரரான பிரான்சன் ரீடின் மறைவு தன்னை நிலைகுலையச் செய்ததாகக் குறிப்பிட்டார். மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான கிரேசன் வாலர், மல்யுத்தத் துறையில் மற்றவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கியதற்காக பிரான்சன் ரீடுக்கு நன்றி தெரிவித்தார்.
முன்னாள் WWE சாம்பியன் கெவின் ஓவன்ஸ், நேரடி நிகழ்ச்சியின்போது உணர்ச்சிப்பூர்வமான உரை மூலம் பிரான்சன் ரீடுக்கு அஞ்சலி செலுத்தினார். மற்றொரு முன்னாள் சாம்பியனான பிக் இ, அவரை ‘அன்பான ராட்சதர்’ எனக் குறிப்பிட்டு, அவரது மறைவு நம்ப முடியாததாக இருப்பதாகத் தெரிவித்தார்.
நேரடி நிகழ்ச்சியில் 10 முறை மணி ஒலித்து அஞ்சலி
பிரான்சன் ரீடின் மறைவுக்கு சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்த WWE நிறுவனம், ஜார்ஜியாவின் ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற நேரடி நிகழ்ச்சியிலும் அவருக்கு அஞ்சலி செலுத்தியது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு, அவரது மறைவு அறிவிக்கப்பட்டு, அவரை நினைவுகூரும் வகையில் 10 முறை மணி ஒலிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்களும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.
பிரான்சன் ரீட், முன்னதாக NXT வட அமெரிக்க சாம்பியன் பட்டத்தையும், 2024ஆம் ஆண்டுக்கான ஆண்ட்ரே தி ஜெயன்ட் நினைவு பேட்டில் ராயல் போட்டியின் வெற்றியாளர் பட்டத்தையும் பெற்றவர்.
WWE தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கடைசியாக ‘கிரவுன் ஜுவல்’ (Crown Jewel) நிகழ்ச்சியில் தோன்றினார். அப்போது ஆஸ்டின் தியரியுடன் இணைந்து ஒரு டேக் டீம் போட்டியில் தலையிட்டார். பின்னர் ஒபா ஃபெமி அவரை மேடையிலிருந்து தூக்கி, அரங்கின் தரையில் வைக்கப்பட்டிருந்த மேசைகள் மீது வீசியது குறிப்பிடத்தக்கது.




