அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார்: பெண் கைது

டெல்லி வருமான வரித் துறை அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த சுபாஷினி என்ற பெண் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அசோக்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.…

டெல்லி வருமான வரித் துறை அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த சுபாஷினி என்ற பெண் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அசோக்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை பாப்பாநாயக்கன்பாளையம் பகுதியில் ஸ்ரீவிநாயகா சொல்யூசன் என்ற பெயரில்
சுபாஷினி என்பவரும், அசோக்குமார் என்பவரும் இணைந்து வேலை வாய்ப்பு நிறுவனம்
நடத்தி வந்தனர். வேலை தொடர்பாக இவர்களிடம் வந்த தஞ்சாவூர் மரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன், பாபநாசம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் ஆகியோரிடம் ஆறு லட்ச ரூபாய் கொடுத்தால் டெல்லியில் வருமான வரித் துறையில் வேலை வாங்கித் தருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவரும் பணத்தை ஆன்லைன் மூலம் கொடுத்த நிலையில் வருமான வரித் துறை வேலைக்கான ஆணையையும் வழங்கியுள்ளனர். ஆனால் அது போலியானது என பின்னர் தெரியவந்தது என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ஆணை போலியானது என்று தெரியவந்த நிலையில் மீண்டும் சுபாஷினி மற்றும் அசோக்குமார் ஆகியோரிடம் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர் . பணத்தைத் திருப்பி தர தாமதப்படுத்தி வந்த  அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு பின்னர் நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகினர். இதையடுத்து, பணம் கொடுத்து ஏமாந்த இருவரும் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதில் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த 2 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மோசடி பணம் கொடுத்து ஏமாந்த இருவரும் அளித்த புகார் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் நேற்று இரவு இடிகரை பகுதியில் வீட்டில்
இருந்த சுபாசினியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அசோக்குமார்
என்பவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். இதே போல் பலரிடம் மோசடி செய்து இருக்கலாம் என்பதால் இது குறித்து பந்தயசாலை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.