மனிதவள மேலாண்மைத்துறை அரசாணை எண் 115-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் என்ற முறையில் ஐந்தாண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக, இன்று இருக்கின்ற அரசுப் பணிகளை எப்படி வெளிமுகமை மூலம் மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து ஆணை பிறப்பித்திருப்பதை பார்க்கும்போது ’உள்ளத்தில் நஞ்சும், உதட்டில் வெல்லமும்’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
மனிதவளம் தொர்டர்பான சீர்திருத்தங்கள் என்று நிதிநிலை அறிக்கையில் சொல்லிவிட்டு, அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக மனிதவள மேலாண்மைத்துறை மூலம் அரசாணை எண் 115 வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின்கீழ் வரும் குழுவின் ஆய்வு வரம்புகளை பார்க்கும்போது அரசு இயந்திரத்தை தனியாரிடம் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு சமூகநீதிக்கு மூடுவிழா நடத்த திமுக அரசு தயாராகிவிட்டது என்பது தெளிவாகிறது. ஒரு புறம் அரசுப் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் வகையில் சமூகநீதிக்கு எதிராக ஒரு குழுவை அமைத்துவிட்டு, மறுபுறம் அரசுப் பணிகளின் அனைத்து நிலைகளிலும் சமூகநீதிக் கொள்கைகளை செயல்படுத்த சட்ட வல்லுநர் குழுவை அமைத்திருப்பது முன்னுக்குப் பின் முரணானது. திமுக அரசின் இரட்டை வேடத்திற்கு மற்றுமொரு சான்று.
ஏற்கனவே அரசாங்கப் பணிகளில் தலையிட்டு வரும் திமுகவினர், அரசுப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், அவர்கள் மூலம் திமுகவினர் தங்களுக்கு வேண்டியவர்களை பணியில் நியமிப்பதற்கும், அதன்மூலம் பணியின் தரம் குறைவதற்கும், இடஒதுக்கீடு என்பதே இல்லாமல் போவதற்கும் அரசின் ரகசியங்கள் வெளியிலே செல்வதற்கும், ஊழல் பெருகுவதற்கும் வழிவகுக்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அரசு வேலைவாய்ப்பு என்பதே இல்லாமல் போய்விடும் சூழ்நிலை உருவாகும்.
திமுக அரசின் இந்த நடவடிக்கை அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்ற ஆர்வமுடைய ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் கனவை சிதைப்பது போல் அமைந்துள்ளது. திமுக அரசின் அரசுப் பணியாளர் விரோத நடவடிக்கைகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட இதர அமைப்புகள் மூலம் உடனடியாக நிரப்புவதற்கும், புதிதாக இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 18.10.2022 நாளிட்ட மனிதவள மேலாண்மைத்துறை அரசாணை எண் 115-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்”. இவ்வாறு அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.








